தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் தொடர் மழை காரணமாக கடல் நீர் மட்டம் ஒரு அடி வரை உயர்ந்துள்ளது. இதனால் அச்சமடைய தேவையில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தென்மேற்கு வங்க கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டம் மையம் கொண்டுள்ளதால் தமிழகத்தின் பல பகுதிகளில் சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விட்டு விட்டு தொடர் மழை பெய்து வருகிறது.
இதனால் பல இடங்களில் பயிரிடப்பட்ட நெல் வயல்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் குடியிருப்புகளையும் மழை நீர் சூழ்ந்துள்ளது. தொடர் மழை நெற்பயிருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் விவாசயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடற்கரை பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மல்லிப்பட்டினத்தில் ஒரு அடி உயரத்திற்கு கடல் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. தொடர் மழையால் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லவில்லை. இதனால் அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.
இது குறித்து மல்லிப்பட்டினம் துறைமுக கமிட்டியின் மேலாண்மை குழு உறுப்பினர் மீனவராஜன் தெரிவிக்கையில், 5 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இருட்டிய வானம் இன்னும் விடியவில்லை. சூரியனை பார்த்து 5 நாள்கள் ஆகி விட்டது. தொடர் மழையால் பல மீனவ கிராமங்களில் மழை நீர் சூழ்ந்து விட்டது.
குறிப்பாக மல்லிப்பட்டினத்தின் ஒரு பகுதியில் குடியிருப்புகளை மழை நீர் சூழ்ந்து விட்டது. அதை அந்த பகுதியினரே வாய்க்கால் வெட்டி வடிய வைத்தனர். மழை காரணமாக சுமார் 500 விசை படகு, 200 நாட்டுப்படகு மீன்பிடிக்க கடலுக்குச் செல்லாமல் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் மீன் பிடியை நம்பியிருக்க கூடிய மீனவர்கள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். மழை நீர், காட்டாறுகளில் வருகின்ற வெள்ளம் இவை கடலில் கலக்கிறது. இதனால் ஒரு அடி உயரத்திற்கு கடல் மட்டம் உயர்ந்துள்ளது. இது மழை காலங்களில் நடக்கின்ற வழக்கமான நடைமுறை தான்.
கடந்த வாரம் இதே போல் மற்ற பகுதிகளில் பெய்த மழை காட்டாறுகளில் வந்ததால் கடல் மட்டம் இரண்டு அடி உயர்ந்தது. மழை நின்ற பிறகு வழக்கம் போல் மாறி விட்டது. கடல் நீர் மட்டம் உயர்வது சிலருக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கு அச்சப்பட தேவையில்லை. இது வழக்கமான ஒன்று தான் இதனை மீனவர்கள் அறிவார்கள். பாதிப்பு ஏற்பட்டால் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கு பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் வந்துள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடற்கரை பகுதியான தம்பிக்கோட்டையிலிருந்து எல்லையான கட்டுமாவடி வரை இந்த நிலைதான் நிலவுகிறது. வெள்ளம் சூழ்கின்ற பகுதிகளில் ஆக்கப்பூர்வமாக மழை நீரை வடிய வைத்தாலே பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம் என அதிகாரிகளுக்கு கூறியுள்ளதாக தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“