கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்ததால் தான் இன்றைக்கு வரை மீனவர்கள் பிரச்சனை தீராமல் உள்ளது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழகத்தில் நேற்று கிருஷ்ணகிரி, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். அதன்படி நேற்று மாலை (ஏப்;12) தஞ்சை நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கருப்பு முருகானந்தத்தை ஆதரித்து வாகன பேரணி சென்றார்.
தஞ்சை மூளை அனுமார் கோவிலில் இருந்து தேரடி வரை மேல ராஜ வீதியில் வாகன பேரணி சென்ற அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பொதுமக்கள் கட்சி தொண்டர்கள் சாலையின் இருபுறமும் நின்று மலர் தூவி வரவேற்று, பூரண கும்ப மரியாதை செய்தனர்.
அப்போது அவர் பேசியதாவது; எழுத்தாளர்கள், சங்கீதம், பாடக் கூடியவர்கள், இசையமைப்பாளர்கள் வாழ்ந்த மண் இந்த தஞ்சை மண். சங்கத் தமிழை வளர்த்த மிகப் பெரிய ஊர் தஞ்சாவூர்.
தமிழகத்தில் பெரிய மாறுதல் ஏற்பட வேண்டும் என்பது மக்கள் மனதில் இருக்கிறது. தமிழகத்தில், உண்மைக்கு புறம்பாக நிறைய விஷயங்களை பேசி வருகிறார்கள்.
கச்சத்தீவு விஷயத்தை ஏன் இப்போது பேச வேண்டும் என்கிறார்கள். அதை பற்றிய அம்சம் குறித்து மக்கள் பேச வேண்டும். விவாதம் செய்ய வேண்டும். கச்சத்தீவு பரம்பரை பரம்பரையாக மீனவர்கள் மீன்பிடித்த இடம். கச்சத்தீவை தாரைவார்த்து கொடுத்ததால் தான் இன்றைக்கு வரை மீனவர்கள் பிரச்சனை தீராமல் உள்ளது என்ற உண்மையை நம் அனைவரும் பேச வேண்டும். தி.மு.க.,வை கேள்வி கேட்க வேண்டும்.
இன்றைக்கு பிரதமர் மோடி கேள்வி கேட்கிறார் என்பது அல்ல. சட்டசபையில் முன்னாள் முதல்வர் ஜெயலிலதா கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அப்போதும் பதில் இல்லை, இப்போதும் பதில் இல்லை. இது குறித்து இன்றைக்கு வரையும் தி.மு.க., பேசவில்லை.
அப்போது இருந்த முதல்வருக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு தெரிந்தும், கையெழுத்து போடும் வரை பேசவில்லை. ஒரு எதிர்ப்பு கூட தெரிவிக்காமல், தமிழக மக்களுக்கு உண்மையை சொல்லாமல் இருந்து விட்டார். தி.மு.க., செய்கின்ற ஒவ்வொரு தமிழக விரோத செயல் குறித்து எந்த பதிலும் அளிக்க மாட்டார்கள். உண்மைக்கு புறம்பாக தகவல்களை தி.மு.க., கூறி வருவதற்கு இது ஒரு உதாரணம்.
சமீபத்தில் தி.மு.க., அமைச்சராக இருந்த ஒருவரே, அந்த குடும்பம் 30 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்து விட்டதை எங்கே வைப்பது என தெரியாமல் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். இது குறித்து ஊடங்கள் கேள்வி கேட்டது. அதற்கும் கூட இன்றைக்கு வரை பதில் இல்லை. அதற்கு பதில் அந்த அமைச்சரை வேறு இடத்திற்கு அனுப்பி வைத்து விட்டனர். தி.மு.க., செய்கின்ற மக்கள் விரோத செயலுக்கு இப்போது வரைக்கு பதில் அளிக்க மாட்டார்கள்.
#WATCH | Tamil Nadu | Union Finance Minister & BJP leader Nirmala Sitharaman holds the roadshow in Thanjavur, in support of party's Thanjavur Lok Sabha constituency candidate M. Muruganantham pic.twitter.com/xhTy4FTnHi
— ANI (@ANI) April 12, 2024
காவிரியில் தண்ணீர் இல்லை. ஆனால், சாராயம் தண்ணீர் போல கொட்டுகிறது. பல ஆண்கள் சாராயத்திற்கு அடிமையாகி போனதால், குடும்பங்கள் கெட்டுக்கொண்டு இருக்கிறது. முழுமையாக சாராயத்தை ஒழிக்கவிட்டாலும், சீர்திருத்தங்களுடன் விற்பனை செய்து இருந்தாலும் பரவாயில்லை. குழாயை திறந்தால் தண்ணீர் வருவது போல சாராயம் வருகிறது. இதை நிறுத்த முடியவில்லை.
இன்றைக்கு போதை பொருட்களை டன் கணக்கில் கொட்டுகிறார்கள். இதிலும், அந்த குடும்பத்திற்கு தொடர்பு உள்ளது என வெட்ட வெளிச்சமாக தெரிந்துள்ளது.
போதை பொருள் விற்பனை செய்த ஆதாயத்தை வைத்து அந்த குடும்பத்தை சேர்ந்தவர்கள் சினிமா எடுத்தார்கள். இதற்கு கோபாலபுரம் குடும்பம் இன்றைக்கு வரையும் அது தொடர்பாக எந்த பதிலும் சொல்லவில்லை.
போதை பொருள் தொடர்பாக முதல்வர் பதில் சொல்ல வேண்டும்.
டி.எம்.கே. என்பது திராவிட முன்னேற்ற கழகம் என்பது, ட்ரக் முன்னேற்ற கழகமாக மாறியுள்ளது. ட்ரக் நமது இளைஞர்களை இன்னும் 10 ஆண்டுகளில் மொத்தமாக அழித்து விடும். ட்ரக் ஆதாயம் மூலமாக குடும்பம் வளரும். தமிழகத்தில் இளையதலைமுறைகள் எக்கேடு கெட்டால் எனக்கு என்ன இருந்து வருகின்றனர்.
பா.ஜ., ஆர்.எஸ்.எஸ்.,சை ஓட ஓட விரட்டுவோம் என முதல்வர் ஸ்டாலின் சொன்னார். போதை விற்பனை செய்யும் தி.மு.க.,வை நாம் ஓட ஓட விரட்டுவோம் எனப் பேசினார்.
நிர்மலா சீதாராமன் பிரச்சார வாகனத்தில் வரும் போது வழியில் இருந்த மூல அனுமார் கோவில், கோதண்டராமர் கோவில், பங்காரு காமாட்சி, காசிநாதர் கோவில், கொங்ணேஷ்வர் கோவில் ஆகிய கோவில்களில் சுவாமியை வாகனத்தில் இருந்த படி வணங்கினார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.