தஞ்சாவூரில் இருந்து ஐந்து கி.மீ தொலைவில் உள்ள புன்னை மரக்காட்டில் புற்று உருவாய் தோன்றியது அம்மன். மூலஸ்தான அம்மன் புற்று மண்ணால் உருவானதால், மூலஸ்தான அம்பாளுக்கு அபிஷேகம் செய்யப்படுவதில்லை. மாறாக உற்சவ அம்மனுக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை தைல காப்பு அபிஷேகம் மட்டுமே நடைபெறும். இக்கோவில் தஞ்சாவூர் அரண்மனை தேஸ்தானத்தின் கீழ் உள்ள 88 கோவில்களில் ஒன்றாகும்.
/indian-express-tamil/media/post_attachments/cfb709b1-7cd.jpg)
கடந்த 2004 ஆம் ஆண்டு கடைசியாக பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லேவால் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு, கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டு, அரண்மனை, தேஸ்வதானம், அறநிலையத்துறை சார்பில், கோவில் திருப்பணிகள் துவங்கியது. 21 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 3 ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜைகளும், 4 ஆம் தேதி நவக்கிரக ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், தொடர்ந்து, 5 ஆம் தேதி மகாலட்சுமி ஹோமம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதியும், 6 ஆம் தேதி சாந்தி ஹோமம், மூர்த்தி ஹோமம், பூர்ணாஹூதியும் நடைபெற்றது. 7 ஆம் தேதி காலை விக்னேஸ்வர பூஜை, கஜ பூஜை நடத்தப்பட்டு, மாலை திருக்குடங்கள் யாகசாலை எழுந்தருளுதல் செய்யப்பட்டு, முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து 8 ஆம் தேதி காலை 2 ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. மாலை 3 ஆம் கால யாகசாலை பூஜைகள், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி நடைபெற்றது.
/indian-express-tamil/media/post_attachments/274672b0-389.jpg)
தொடர்ந்து நேற்று 9 ஆம் தேதி காலை 4 ஆம் கால யாகசாலையும், மாலை 5 ஆம் கால யாகசாலை பூஜை நடைபெற்று, திரவ்யா ஹூதி, பூர்ணாஹூதி முடிவடைந்து, தீபாராதனை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று காலை மாரியம்மன் மற்றும் பரிவார கலசங்கள் புறப்பாடு நடந்தது. பிறகு, விநாயகர், சுப்ரமணியர், மாரியம்மன், விஷ்ணு துர்க்கை, பேச்சியம்மன் விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு சமகால மஹா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, 10:00 மணிக்கு மூலாலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புனித நீர் ஊற்றப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனால், தஞ்சாவூர் விழாக்கோலம் பூண்டு இருந்தது.
/indian-express-tamil/media/post_attachments/c648781f-48d.jpg)
இந்த நிலையில் கோயில் குடமுழுக்கு விழா மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் ஆலோசனைப்படி நடத்தப்பட்டது. குடமுழுக்கு விழாவில் கலந்து கொள்வதற்கு அனுமதி அட்டை (பாஸ்) வழங்குவதில் மாவட்ட ஆட்சியர் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றும், இதில் முறைகேடு நடந்துள்ளது என்றும், மேலும், பக்தர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பா.ஜ.க-வின் மாநில பொதுச் செயலாளர் கருப்பு.முருகானந்தம் தெரிவித்துள்ளார்.
/indian-express-tamil/media/post_attachments/3eaf28ee-662.jpg)
இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் கருப்பு.முருகானந்தம் கூறியதாவது, மாரியம்மன் கோயில் திருப்பணிகளுக்கு வசூலிக்கப்பட்ட நன்கொடை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். குடமுழுக்கில் கலந்து கொண்ட பொதுமக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்ததாக சொல்கிறார்கள். பாஸ் வழங்குவதில் மாவட்ட ஆட்சியர் நடுநிலையுடன் நடந்து கொள்ளவில்லை. லட்சகணக்கில் நிதி கொடுத்தவர்களுக்கு முறையாக பாஸ் வழங்காமல் தி.மு.க நிர்வாகிகளுக்கு அதிகமாக வழங்கியிருக்கிறார்.
/indian-express-tamil/media/post_attachments/e4f56f0b-67e.jpg)
இது தொடர்பாக கேட்பதற்கு பல முறை போன் செய்தும் அவர் போனை எடுக்கவில்லை. கருப்பு கொடி போராட்டம் நடத்துவோம் என்ற பிறகு எங்கள் கட்சிக்கு பத்து பாஸ் வழங்கினார். ஆட்சியர் பாஸ் வழங்வதில் திட்டமிடலுடன் செயல்பட்டிருக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர் பொதுவானவராக இருக்க வேண்டும். பொதுமக்களுக்கானவராக இருக்க வேண்டும். ஆளும் கட்சிகாரரை போல் இருக்க கூடாது. இது என்ன கோயில் குடமுழுக்கா இல்லை தி.மு.க கட்சி கூட்டமா? மாவட்ட ஆட்சியரின் செயல் மேசமான முன்னுதாரணம். எனவே அவருக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து கொள்கிறோம் என்றார்.
க.சண்முகவடிவேல்