தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள நடுக்காவேரி அரசமரத் தெருவைச் சேர்ந்தவர் அய்யாவு. இவரது மகன் தினேஷ். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை தினேஷின் மாமா காலமாகிவிட்டார். இதனால் இந்த துக்க நிகழ்வுக்கு செல்வதற்காக இவர் நடுக்காவேரி பேருந்து நிறுத்தத்தில் குடும்பத்தினருடன் நின்று கொண்டிருந்தார்.
அப்போது, இவரை அங்கு வந்த காவல்துறையினர் விசாரணைக்கு எனக் கூறி நடுக்காவேரி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவர்களைப் பின்தொடர்ந்து குடும்பத்தினரும் காவல் நிலையத்துக்குச் சென்றனர். பொது இடத்தில் கத்தியைக் காட்டி மிரட்டியதாகக் கூறி வழக்குப் பதிந்து தினேஷை போலீஸார் கைது செய்தனர். தினேஷ் மீது பொய் வழக்கு போடக்கூடாது என்றும், அவரை விடுதலை செய்யுமாறும் காவல் நிலையம் முன்பு அவரது உறவினர்கள் மற்றும் சகோதரிகள் கோஷம் எழுப்பினர்.
மேனகாவை பெண் பார்க்க மாப்பிள்ளை வீட்டினர் வர இருப்பதாகவும், தற்போது தினேஷை விடுவிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், தினேஷ் வெளியே விடப்படாததால், மனம் உடைந்த அவரது தங்கைகளான மேனகா (31), கீர்த்திகா (29) காவல் நிலையம் முன் விஷம் குடித்தனர்.
இதனால் மயக்கமடைந்த இருவருக்கும் நடுக்காவேரி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன்பின்னர் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களில் பொறியியல் பட்டதாரியான கீர்த்திகா புதன்கிழமை காலை உயிரிழந்தார். மேனகா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதையறிந்த உறவினர்கள் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு திரண்டு சென்று, இந்தச் சம்பவம் தொடர்பாக கோட்டாட்சியர் விசாரணை நடத்தி தொடர்புடையவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் துறை உயர் அலுவலர்களிடம் வலியுறுத்தினர்.
இதனிடையே, கீர்த்திகாவின் உடல் உடற்கூறாய்க்காக பிரேத பரிசோதனை கூடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்கப்படும்வரை உடலை வாங்க மாட்டோம் என உறவினர்கள் கூறியதால், உடற்கூறாய்வு செய்யப்படாமல், பிரேத பரிசோதனைக் கூடத்தில் கீர்த்திகாவின் உடல் உள்ளது. மேலும், மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் உறவினர்கள் அளித்த புகார் மனுவில், தினேஷின் தந்தை அய்யாவுவை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கள்ளத்தனமாக மதுபானம் விற்குமாறு வற்புறுத்தினார்.
அதற்காக வற்புறுத்திய நபரை தினேஷ் திட்டியதால், அவர் மீது நடுக்காவேரி காவல் நிலையத்தில் பொய் புகார் அளிக்கப்பட்டது. அதன் பிறகு புகார்தாரர் புகார் மனுவை திரும்பப் பெற்றாலும், ஆயுதம் வைத்திருந்ததாகக் கூறி காவல் துறையினர் வழக்குப் பதிந்து தினேஷை கைது செய்தனர். மேலும், இதுகுறித்து காவல் நிலையம் சென்ற அவரது சகோதரிகளை காவல் துறையினர் தகாதா வார்த்தைகளால் திட்டியதால், அவமானமடைந்த மேனகாவும், கீர்த்திகாவும் காவல் நிலையம் எதிரே, வயலுக்கு அடிக்க வைத்திருந்த களைக்கொல்லி மருந்தை போலீஸார் கண் முன்னேயேக் குடித்தனர்.
அதை போலீஸார் தடுக்காமால் செத்தா, செத்துப்போங்க-ன்னு சொல்லிட்டு உள்ளே போயிட்டாங்க. பின்னர் நாங்க உடனே ஆட்டோ பிடித்து மருத்துவனைக்கு கொண்டு சென்றோம். சிகிச்சை பலனின்றி கீர்த்திகா உயிரிழந்தார். இந்த உயிரிழப்புக்கு காரணமான நடுக்காவேரி காவல் ஆய்வாளர் சர்மிளா, உதவி ஆய்வாளர் அறிவழகன், காவலர் மணிமேகலை உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே, மேனகாவும், கீர்த்திகாவும் காவல் நிலையத்தில் விஷம் குடிக்கவில்லை என்றும், ஏற்கெனவே வெளியே விஷம் குடித்துவிட்டு காவல் நிலையத்துக்கு வந்ததாகவும், இச்சம்பவம் தொடர்பாக காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து விசாரிக்கப்படும் எனவும், காவல்துறை உயர் அலுவலர்கள் தெரிவித்தனர்.
இந்தநிலையில் 10-ம் தேதி தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தஞ்சை நடுக்காவிரி காவல் நிலையம் முன் இளம்பெண்கள் விஷம் குடித்த விவகாரத்தில் காவல் ஆய்வாளர் சர்மிளா காத்திருப்பு பட்டியலுக்கு அனுப்பப்பட்டுள்ளார். இது தொடர்பாக RDO தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக அந்த ஊரைச்சேர்ந்தவர்களிடம் பேசியபோது; "அய்யாவு பட்டியலினத்தை சேர்ந்தவர். நடுக்காவேரியை சேர்ந்த ஒருவர் சட்டத்துக்கு புறம்பாக மதுப்பாட்டில் விற்பனை செய்து வருகிறார். மது பழக்கத்துக்கு ஆளான அய்யாவுவை அந்த நபர் மது விற்பனை செய்ய வைத்துள்ளார். தினேஷ்க்கு இது பிடிக்காததால் மது விற்பனை செய்பவரிடம் சென்று என் அக்காவுக்கு திருமணம் நடக்க போகுது, வரும் 12ம் தேதி நிச்சயதார்த்தம். மாப்பிள்ளை வீட்டுக்கு இது தெரிந்தால் என்னாவது.. இனி எங்க அப்பாவை மது விற்பனை செய்ய அழைக்காதீர்கள் என்றுள்ளார்.
அப்போது, தினேஷ்க்கும், அந்த நபருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதில் தினேஷ் தன்னை தாக்கியதாக அந்த நபர் நடுக்காவேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். சாராய வியாபாரி கொடுத்த புகாருக்கு உடனடியாக ஆக்க்ஷன் எடுத்த போலீஸார் தினேஷை காவல் நிலையம் அழைத்துச்சென்று வழக்குப்பதிந்ததால் தான் ஒரு உயிர் பலியானதற்கு காரணமாக அமைந்திருக்கின்றதுங்க., சாராயா வியாபாரிகளுக்கும் போலீஸாருக்கும் உள்ள நெடுக்கத்தால்தான் இந்த சம்பவம் நடந்திருக்கு, சாதாரணமா நாம போனா உடனே வழக்கு பதிவு செஞ்சிடுவாங்களா..., இப்ப வா, அப்ப வான்னு அலைக்கழிக்கத்தான் செய்வாங்க என்றார்கள் வேதனையுடன்.
செய்தி க.சண்முகவடிவேல்.