Advertisment

தஞ்சை மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை? வெளியான புதிய வீடியோ

தஞ்சை மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் அடையாளம் தெரியாத நபர் மாணவியிடம் பேசி வீடியோ பதிவு செய்துள்ளார்.

author-image
WebDesk
New Update
Thanjavur student suicide case, new video trigger debates, தஞ்சை மாணவி மரணத்திற்கு மதமாற்றம் காரணம் இல்லை, தஞ்சை மாணவி மரணம் தொடர்பாக வெளியான புதிய வீடியோ, தஞ்சை மாணவி, Thanjavur, BJP, Tamilandu

தஞ்சாவூர் அருகே மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் அவரை மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால்தான் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், புதிய வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் மாணவியை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எதுவும் பதிவாகவில்லை என்று குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

அரியலூர் மாவட்டம், வடுகபாளையம் கீழத்தெருவை சேர்ந்தவர் முருகானந்தம் மகள் லாவண்யா. இவர் மைகேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் 12 படித்து வந்தார். மேலும், பள்ளியின் அருகில் உள்ள செயின்ட் மைக்கேல் மகளிர் விடுதியில் தங்கி படித்து வந்தார். இவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மாணவி லாவண்யா தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில், மாணவியை விடுதியில் மதமாற்றம் செய்ய வற்புறுத்தியதால்தான் தற்கொலை செய்துகொண்டார் என்று பாஜகவினர் புகார் தெரிவித்து மாணவியின் மரணத்துக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தினர்.

முன்னதாக, மாணவி லாவண்யாவிடம் இறப்பதற்கு முன்பு மாஜிஸ்திரேட்டிடம் அளித்த மரண வாக்குமூலத்தில் மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக எதுவும் பதிவாகவில்லை. மரண வாக்குமூலத்தின் அடிப்படையில், மாணவியின் தற்கொலைக்கு காரணமான ஹாஸ்டல் வார்டன் சகாயமேரியை போலீசார் கைது செய்தனர்.

அதே நேரத்தில், மாணவி லாவண்யா விஷம் குடித்தபின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது, ஒருவர் மாணவியிடம் பேசி பதிவு செய்த வீடியோவில், மாணவி மதமாற்றம் செய்ய வற்புறுத்தப்பட்டார் என்று பதிவாகி இருந்தது. இதனால், மாணவி மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதால்தான், தற்கொலை செய்துகொண்டதாக பாஜகவினர் உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டினர். மாணவிக்கு நீதி கேட்டு பாஜக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், மாணவி லாவண்யா தற்கொலை விவகாரத்தில் ஒரு புதிய வீடியோ ஒன்று வெளியாகி சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அடையாளம் தெரியாத நபர் மாணவியிடம் பேசி வீடியோ பதிவு செய்துள்ளார். அதில், மாணவி தன்னை மதம்மாற கட்டாயப்படுத்தியதாக சொல்லவில்லை என்று பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

தற்போது வெளியான ஒரு புதிய வீடியோவில் மாணவியிடம் அடையாளம் தெரியாத நபர் கேள்வி கேட்க மாணவி பதில் சொல்வதாக அமைந்துள்ளது.

மாணவி: என் பெயர் ****, எங்க அப்பா பெயர் முருகானந்தம், எங்க அம்மா பெயர் சரண்யா, எப்பவுமே நான் தான் ஃபர்ஸ்ட் ரேங்க் எடுப்பேன். ஆனால், இந்த வருஷம் என் குடும்ப சூழ்நிலை ஸ்கூலுக்கு என்னால போக முடியல.

கொஞ்சம் லேட்டாதான் போனேன். அதனால், எப்பவுமே என்னைய வந்து போர்டிங்ல சிஸ்டர் இருப்பாங்க அவங்க வந்து கணக்கு வழக்கு பார்க்க சொல்வாங்க. இல்ல சிஸ்டர் நான் லேட்டாதானே வந்தேன் எனக்கு ஒன்னும் புரியல, நான் அப்புறமா எழுதிதறேன்னு சொன்னாலும் கேட்கவே மாட்டாங்க.

பரவாயில்லை எழுதிகொடுத்துட்டு உன் வேலையை பாரு, அப்படி இப்படினு சொல்லி, ஏதாச்சும் என்ன எழுதவச்சிட்டே இருப்பாங்க.

நான் கரெக்டா எழுதினாலும் தப்பு தப்புனு சொல்லி ஒரு கணக்குக்கு ஒரு மணி நேரம் உட்கார வச்சிருவாங்க… கான்செண்ட்ரேஷன் பண்ணவே முடியல, அதனால, நான் மார்க் கம்மியா எடுத்துட்டு இருந்தேன். இப்படியே போயிட்டு இருந்தா என்னால படிக்க முடியாதுனு நெனச்சுதான், நான் விஷத்தை குடிச்சிட்டேன் என்று மாணவி கூறுகிறார்.

அப்போது, அடையாளம் தெரியாத நபர் மாணவியிடம் உன் பெயர் என்னம்மா என்று கேட்கிறார். அதற்கு மாணவி தனது பெயரை கூறுகிறார்.

அடையாளம் தெரியாத நபர் அந்த சிஸ்டர் பெயர் என்ன என்று கேட்கிறார்.

அதற்கு மாணவி சகாயமேரி என்று பதில் கூறுகிறார்.

தொடர்ந்து அந்த அடையாளம் தெரியாத நபர் மாணவியிடம் கேள்வி கேட்கிறார்.

அடையாளம் தெரியாத நபர்: உங்க ஃபாதர் பேர் என்ன?

மாணவி: ஃபாதர்லாம் இல்ல.

அடையாளம் தெரியாத நபர்: அந்த ஸ்கூல் ஹெட்மாஸ்டர் பெயர்?

மாணவி: அவங்கலாம் எதுவும் செய்யல.

அடையாளம் தெரியாத நபர்: அவங்க பெயர் என்னானு கேட்டேன்.

மாணவி: ஆரோக்கியமேரி,

அதற்கு அடையாளம் தெரியாத நபர் ஆரோக்கியமேரி என்று திரும்ப கூறுகிறார்.

அதற்கு மாணவி ம்… என்று கூறுகிறார்.

அடையாளம் தெரியாத நபர்: உங்கள வந்து வேற ஏதாச்சும் வேலை செய்ய சொல்வாங்களா?

மாணவி: வேற வேலனா கேட் பூட்ட சொல்வாங்க, எல்லா வேலையும் என்னையே செய்ய சொல்வாங்க.

அடையாளம் தெரியாத நபர்: என்னென்ன வேலை செய்வீங்க?

மாணவி: நான் காலையில எல்லாரும் எந்திரிக்கிறப்ப, கேட் தொறக்கறது, மோட்டர் போட்டு, எல்லாரும் சாப்பிட்டதற்கு அப்புறம், மோட்டர் எல்லாம் கர்ரெக்ட்டா இருக்கா… வார்டன் சார் எல்லா வெலையும் என்ன செய்ய சொல்வாரு…

அடையாளம் தெரியாத நபர்: அவரு பெயர்?

மாணவி: கேட்டா நீதான் பொறுப்பாக இருக்க அப்படிம்பாங்க…

அடையாளம் தெரியாத நபர்: சரிமா, உன்னைய ஸ்கூல்ல போட்டு வைக்கக் கூடாது அந்த மாதிரிலாம் எதாவது சொல்வாங்களா?

மாணவி: அதெல்லாம் எதுவும் சொல்ல மாட்டாங்க.

அடையாளம் தெரியாத நபர்: வேற… பொங்கலுக்கு ஊருக்கு வந்தியா?

மாணவி: ம், அப்படிலாம் கேட்டா, இல்ல நீ படிக்கணும், நீ இங்கே இரு அப்படினு சொல்லி, என்னைய அங்கேயே இருக்க வச்சிருவாங்க.

அடையாளம் தெரியாத நபர்: இப்ப பொங்கலுக்குகூட ஊருக்கு வரலையா?

மாணவி: பொங்கலுக்கு இப்ப உடம்பு சரியில்லனு சொல்லி அனுப்பி வச்சிடுவாங்க.

அடையாளம் தெரியாத நபர்: நீங்க மருந்து சாப்பிட்டது அவங்களுக்கு தெரியுமா?

மாணவி: தெரியாது.

அடையாளம் தெரியாத நபர்: அவங்களுக்கு தெரியுமா?

மாணவி: ம்ம்…

அடையாளம் தெரியாத நபர்: சரி மா என்று கூறுகிறார்.

இந்த வீடியோ பதிவில் மாணவி தன்னை மதம்மாற்ற கட்டாயப்படுத்தியதாக எதுவும் கூறவில்லை.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Thanjavur
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment