தஞ்சாவூர் களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜை 94 ஆம் ஆண்டு விழா நடைபெற்றது. நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கும் தேர் திருவிழா அதிகாலை வரை நடைபெறும்.
இந்நிலையில், அதிகாலை 3 மணியளவில் தேரினை மக்கள் வடம் பிடித்து இழுத்து வந்த நிலையில், அங்கு மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியின் மீது தேர் உரசியதில் தேரின் மீது மின்சாரம் பாய்ந்தது. இந்த துயர சம்பவத்தில் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்தில் ஆய்வு மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் தஞ்சாவூர் செல்லவுள்ளார். அங்கு, உயிரிழந்தோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து அறிக்கை வெளியிட்ட முதல்வர், தஞ்சாவூர் மாவட்டம், களிமேடு கிராமத்தில் நடந்த தேர் விபத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவத்தை அறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
காயமடைந்துள்ள 15 பேருக்கும் சிறப்பான சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளேன் விபத்து நிகழ்ந்த இடத்தில் மீட்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்தவும் உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், அமைச்சர் அன்பில் மகேஷ் விமானம் மூலம் காலை 9 மணிக்கு தஞ்சாவூர் செல்கிறார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil