/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-20-at-12.21.54.jpeg)
தஞ்சை திருச்சி தேசிய நெடுஞ்சாலை
செங்கிப்பட்டி அருகே தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் மேம்பாலத்தில் பக்கவாட்டு சுவர் இன்று காலை சரிந்து விழுந்தது. இதனால் தஞ்சை திருச்சி சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இது குறித்த விவரம் வருமாறு;
தஞ்சாவூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை 15 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட்டது. அப்போது பல்வேறு இடங்களில் மேம்பாலம் கட்டப்பட்டதைப் போல, செங்கிப்பட்டி காவல் நிலைய சரகத்துக்கு உள்பட்ட சானூரப்பட்டி முதன்மைச் சாலையிலும் கடந்த 2008 ஆம் ஆண்டு மேம்பாலம் அமைக்கப்பட்டது.
இப்பகுதி தஞ்சாவூர் - திருச்சி வழித்தடம் மட்டுமல்லாமல், தெற்கே கந்தர்வகோட்டை, வடக்கே பூதலூர், திருக்காட்டுப்பள்ளி வழித்தடங்களுக்கும் முக்கியமான சந்திப்பாக உள்ளது. இந்நிலையில், சானூரப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் பக்கவாட்டு சுவர் இன்று காலை சரிந்து விழுந்தது.
/tamil-ie/media/media_files/uploads/2023/06/WhatsApp-Image-2023-06-20-at-12.21.55.jpeg)
தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறையினர், காவல் துறையினர், வருவாய்த் துறையினர் உள்ளிட்டோர் நிகழ்விடத்துக்குச் சென்று பார்வையிட்டனர். இதையடுத்து, மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அணுகு சாலை வழியாகத் திருப்பி விடப்பட்டது.
ஆனால், திருச்சி வழித்தடத்தில் இருந்து வரக்கூடிய வாகனங்கள் மேம்பாலத்தின் வடக்குப் பகுதி வழியாக அனுமதிக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்திலும் விரைவில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அணுகு சாலை வழியாகத் திருப்பி விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சாலையின் பராமரிப்பு பணிகளை மதுக்கான் நிறுவனம் செய்து வருகிறது. முறையான பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை இந்த நிறுவனம் சரியாக செய்யாததால் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம். அல்லது பாலம் அமைக்கும் போதே ஸ்த்திர தன்மையுடன், கட்டுமானம் உறுதியற்ற நிலையில் இந்த பாலம் போக்குவரத்துக்கு பயன்பட்டிருக்கலாம் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. அப்பகுதியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு பரபரப்பை ஏற்படுத்தினர்.
இந்த நிலையில், சென்னை ஐஐடியில் இருந்து வல்லுநர்கள் வந்து ஆய்வு செய்த பிறகு, அவர்களுடைய ஆலோசனைகளின் அடிப்படையில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, விரைவில் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்யப்படும் என நெடுஞ்சாலைத் துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தின் முக்கிய ஆன்மீகம், சுற்றுலா தலங்களான தஞ்சை பெரிய கோயில், திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், பட்டுக்கோட்டை அலையாத்தி காடுகள், வேளாங்கண்ணி மாதா கோயில், நாகூர் உள்ளிட்ட பல்வேறு தளங்களுக்கு இந்த சாலை தான் மிக முக்கியம் வாய்ந்த சாலையாக இருக்கின்றது. இந்த சாலை மார்க்கத்தை தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்ற நிலையில் பாலத்தில் மண் சரிவு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.