/indian-express-tamil/media/media_files/FdEuJTSS7BgStt2Np6Pj.jpg)
2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் விருதுகள் அறிவிப்பு
தமிழக அரசு 2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார் விருது, டாக்டர் அம்பேத்கர் விருது, திருவள்ளுவர் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகளை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அறிவித்தார்.
தமிழக அரசு ஆண்டு தோறும் டாக்டர் அம்பேத்கர் விருது, திருவள்ளுவர் விருது, பெருந்தலைவர் காமராஜர் விருது, பேரறிஞர் அண்ணா விருது, மகாகவி பாரதியார் விருது, பாவேந்தர் பாரதிதாசன் விருது, தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது ஆகிய விருதுகளை வழங்குகிறது. ஒவ்வொரு விருதும் ரூ. 2 லட்சம் பணமும் 1 பவுன் தங்கபதக்கமும் தகுதி உரையும் கொண்டது.
அந்த வகையில், 2023-ம் ஆண்டுக்கான தந்தை பெரியார், டாக்டர் அம்பேத்கர் விருதுகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (12.01.2024) அறிவித்தார்.
அதன்படி, சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது சமூகநீதி கண்காணிப்புக் குழு தலைவர் சுப. வீரபாண்டியனுக்கு தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர்களுக்கு வழங்கப்படும் டாக்டர் அம்பேத்கர் விருதுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பி. சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
திருவள்ளுவர் விருது தவத்திரு பாலமுருகனடிமை சுவாமிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பேரறிஞர் அண்ணா விருதுக்கு பத்தமடை பரமசிவத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பெருந்தலைவர் காமராசர் விருது உ. பலராமனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாகவி பாரதியார் விருது கவிஞர் பழநிபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
பாவேந்தர் பாரதிதாசன் விருது எழுச்சிக் கவிஞர் முத்தரசுவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது ஜெயசீல ஸ்டீபனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் விருது முனைவர் இரா.கருணாநிதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
விருது பெறும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ. 2 லட்சம் தொகை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரையும் வழங்கப்படும். இந்த விருதுகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை (13.01.2024) வழங்குகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.