கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதியில் 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்ட விஜயதரணி வெற்றிபெற்றார்.
அதன்பின், மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட போது, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு காங்கிரஸ் தலைமையை விஜயதரணி அணுகினார். ஆனால், அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில், தனது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டு, பாஜகவில் சேர்ந்தார்.
இதனால், சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
இதில், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட், பாஜக சார்பில் வி.எஸ்.நந்தினி, அதிமுக சார்பில் ராணி, நாம் தமிழர் கட்சி சார்பில் ஜெமினி உள்ளிட்டோர் போட்டியிட்டனர்
இதில், காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 40,174 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் மொத்தம் 91,054 வாக்குகள் பெற்றார்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற தாரகை கத்பர்ட், சபாநாயகர் அப்பாவு, தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ-க்கள் உள்ளிட்டோர் முன்னிலையில் எம்எல்ஏ-வாக இன்று பதவியேற்று கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தாரகை கத்பர்ட், ‘இன்று விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக, சபாநாயகர் முன்னிலையில் நான் பதவியேற்று இருக்கிறேன்.
காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதற்கு உதாரணமாக, இன்றைக்கு பெரும் வாக்கு வித்தியாசத்தில் நான் வெற்றி பெற்றிருக்கிறேன். அதற்காக காங்கிரஸ், தமிழக முதல்வர் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு இருப்பது 2 வருடங்கள் தான். இதில் காமராஜர் ஆட்சியில் கொண்டு வந்த கோதையாறு அணையில் மின் உற்பத்தி செய்யக் கூடிய 2 யூனிட்களில் ஒரு யூனிட் செயலிழந்துள்ளது. முதலில் அதை சரி செய்ய வேண்டும்.
விளவங்கோடு தொகுதியில் சாலை மிகவும் மோசமாக உள்ளது. மக்களின் அத்தியாவசிய தேவைகளான சாலை, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர்.. இதை மட்டும் தான் இந்த இரண்டு வருடங்களில் எனக்கு செய்வதற்கு நேரம் இருக்கிறது.
இதில் மட்டும் தான் இப்போது கவனம் செலுத்த வேண்டும் என்று நான் முடிவு செய்துள்ளேன், என்று தாரகை கத்பர்ட் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“