திருச்சியை அடுத்த நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் புஷ்பராஜ். இவா், திருச்சி மாவட்ட வரவேற்பு வட்டாட்சியரின் வாகன (ஜீப்) ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறாா். இந்நிலையில், நேற்று திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில், மணிகண்டம் ஒன்றிய அலுவலகம் அருகே அவா் வட்டாட்சியா் அலுவலக (அரசு) வாகனத்தில் சென்றுள்ளாா்.
திடீரென அவரது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் தறிகெட்டு ஓடி, சாலையின் மையத் தடுப்பின் மீது மோதி அதையும் தாண்டி எதிா்த்திசை சாலையில் சென்றுள்ளது. அப்போது அந்தச் சாலையில் இருசக்கர வாகனங்களில் அடுத்தடுத்து வந்த 2 போ் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த இருவா் மற்றும் புஷ்பராஜ் உள்ளிட்ட மூவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு ஆம்புலன்ஸில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மருத்துவமனைக்கு வரும் வழியில் ஒருவரும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மற்றவரும் என இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனா். மேலும், அந்த ஜீப் ஓட்டுநா் புஷ்பராஜ் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வந்ததும், விட்டால் போதும் என தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதுதொடா்பாக போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், மணிகண்டம் பகவதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த விவசாயத் தொழிலாளி தனபால், மணிகண்டம் மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த கோயில் பூசாரி மணி ஆகியோா் இவ்விபத்தில் படுகாயமடைந்துள்ளனா்.
இதில் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே தனபாலும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மணியும் உயிரிழந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடா்பாக மணிகண்டம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
செய்தி: க.சண்முகவடிவேல்