சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் இருந்து 1 கிமீ தூரத்தில் உள்ளது தட்டான்குளம் கிராமம். இக்கிராமம் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இதன் அருகே திருப்புவனம் துணை மின் நிலையமும் அமைந்துள்ளது. துணை மின் நிலையம் அருகில் இருந்தும் கடந்த 10 நாட்களாக தட்டான்குளம் கிராமத்தின் ஒரு பகுதி இருளில் மூழ்கியுள்ளன.
ஊரின் நடுவே செல்லும் ரயில் தண்டவாளத்தை ஒட்டியுள்ள ரயில்வே கேட் கடந்து திருப்புவனம் கண்மாய்க்கரைக்கு செல்லும் வழியில் வயல்வெளிகளை ஒட்டி உள்ள இடத்தில் 30க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளுக்கு கழுகேர்கடை ஊராட்சி பகுதியில் உள்ள வயல்வெளிகளை கடந்து வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் மின் வயர்கள் மீது தென்னை மட்டைகள் விழுவதாலும், சீமை கருவேல மரங்கள் படர்ந்து வளர்வதாலும் அடிக்கடி மின் மின்சார வினியோகம் துண்டிக்கப்படுகின்றன. அடிக்கடி மின் பழுது ஏற்பட்டு பெரும்பாலும் இருளிலே இப்பகுதி மூழ்கி கிடக்கின்றன.
இந்நிலையில்10 நாட்களுக்கு முன்பு பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழையில் ரயில்வே கேட் அருகில் உள்ள செல்லாண்டி அம்மன் கோயில் பகுதியில் உள்ள ஆல மர கிளை முறிந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்து கால்வாய் தண்ணீரில் விழுந்தன. 2 மின்கம்பங்கள் சேதம் அடைந்தன . திருப்புவனம் கண்மாய்க்கு செல்லும் கால்வாயில் மூழ்கிக் கிடக்கின்றன. முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றுவதற்கு பல ஆயிரங்கள் செலவாகும் என்பதால் இந்தச் செலவை யார் ஏற்பது என்று மின்சாரத்துறை, வருவாய்த்துறை, ஊராட்சி நிர்வாகம் ஆகிய தரப்பினரிடையே ஒத்துழைப்பு இல்லாததாலும் செலவழிக்க யார் முன்வருவது என்ற தயக்கத்தாலும் கடந்த 10 நாட்களாக மின் வயரில் விழுந்த மரக்கிளைகள் அப்படியே கிடக்கின்றன.
இதனால் கடந்த 10 நாட்களாக அப்பகுதியில் உள்ள குடியிருக்கும் மக்கள், பள்ளி மாணவர்கள், விவசாயிகள் மின்சாரம் இன்றி பரிதவித்து வருகின்றனர். இது குறித்து வருவாய்த் துறையினர், மின்சாரத் துறையினர் , ஊராட்சி நிர்வாகத்திடம் தகவல் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளி மாணவர்கள் இரவில் மெழுகுவர்த்தியிலும் சிம்னி விளக்குகளிலும் படித்து வருகின்றனர். தற்போது தேர்வுகளுக்கு படிக்க முடியாமலும் வீட்டுப்பாடங்கள் செய்ய முடியாமலும் மாணவர்கள் பரிதவித்து வருகின்றனர். இரவில் கொசு தொல்லைகளால் தூக்கமின்றி காலையில் சரியான நேரத்திற்கு எழுந்து வேலைக்கு செல்ல முடியாமலும் பரிதவித்து வருகின்றனர்.
மேலும் குடிப்பதற்கும் குளிப்பதற்கும் தண்ணீர் இன்றி விலை கொடுத்து வாங்கி குடிக்கின்றனர் .மேலும் வாழ்வாதாரமாக உள்ள ஆடு மாடுகளுக்கும் தண்ணீர் இன்றி மிகவும் சிரமப்படுகின்றனர். இது போன்று வெளியில் சொல்ல முடியாத பல துயரங்களுக்கு அப்பகுதி மக்கள் ஆளாகி வருகின்றனர். அந்த மக்களின் குறைகளை யார் தீர்த்து வைப்பது என்று தெரியாமல் பரிதவித்து வருகின்றனர்.
இதற்கு நிரந்தர தீர்வாக தட்டாங்குளம் கிராமத்தின் நகர்ப்பகுதியோடு உள்ள மின் இணைப்புகளை நீக்க வேண்டும் என அப்பொழுது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விநாயகர் சதுர்த்தி விழாவுக்காவது மின் இணைப்பு கிடைக்குமா என்ற ஏக்கத்தில் பகுதி மக்கள் உள்ளனர். அதேபோல் விவசாய நிலங்களில் உள்ள மின் மோட்டார்கள் இயக்க முடியாமலும் நெல் வயல்கள் தென்னந்தோப்புகள் தண்ணீர் இன்றி காய்ந்து வருகின்றன எனவும் அப்பகுதி மக்கள் கூறினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.