கள்ளக்குறிச்சி நகராட்சியில் நகர மன்ற கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டம் நடைபெறுவதற்காக அனைத்து கவுன்சிலர்களுக்கும் ஏற்கனவே நகராட்சி கூட்டம் குறித்து அஜந்தா அனுப்பப்பட்டது.
அதை கண்ட அதிமுக கவுன்சிலர்கள் தமிழகத்தையே உலுக்கிய கள்ளச்சாராயம் சம்பவத்தில் கள்ளக்குறிச்சியில் 67 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு ஒரு இரங்கல் தீர்மானம் இல்லாததாலும், மேலும் நகர மன்ற கூட்டத்தில் இரங்கல் தீர்மானத்தை எழுத்துப்பூர்வமாக நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி கருப்பு சட்டை அணிந்து அதிமுக கவுன்சிலர்கள் நகராட்சி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதை கண்ட சேர்மன் சுப்பராயலு வாய்மொழியாக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி தெரிவிக்கப்படும் என தெரிவித்து கூட்டத்தை தொடங்கினார். இந்த கூட்டத்தில் பேசிய அதிமுக நகரச் செயலாளர் 11-வது வார்டு கவுன்சிலருமான பாபு கள்ளச்சாராயம் குடித்து 67 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் அது தொடர்பாக ஒரு தீர்மானம் கூட நிறைவேற்றாமல் இரங்கல் தீர்மானம் இல்லாமல் இந்த கூட்டம் நடப்பதால் இதிலிருந்து நாங்கள் வெளியேறுகிறோம் என கூட்டத்திலிருந்து வெளியேறினர்.
அப்போது நகராட்சி சேர்மன் சுப்புராயலு உடனடியாக எழுந்து மைக்கை பிடித்து மக்கள் முதல்வர் வாழ்க என கோஷம் எழுப்பினார். இதற்கு அதிமுக கவுன்சிலர்களும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வாழ்க என முழக்கம் எழிப்பினர். இதனால் திமுக கவுன்சிலர்களும் அதிமுக கவுன்சிலர்களும் தங்கள் தலைவர்கள் புகழைப் பாடிக்கொண்டு கோஷம் எழுப்பினர்.
மேலும் ஒரு கட்டத்தில் வாக்குவாதம் ஆக மாறி பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.அப்போது திமுக கவுன்சிலர்கள் தங்கள் ஆட்சியில் செய்த சாதனைகளை சொல்லியும் அதிமுக கவுன்சிலர்கள் இந்த திமுக ஆட்சியில் நிறைவேற்றப்படாத பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தும் வலுவாக கோஷம் எழுப்பி மேஜயை தட்டி பயங்கர வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கூட்டு அரங்கம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்த பட்டியலின மக்களுக்கு விரோதமாக நகராட்சி ஆணையரும் தமிழக முதல்வரும் செயல்படுவதாக அதிமுக கவுன்சிலர்கள் கோஷம் எழுப்பியவாறு வெளிநடப்பு செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அதிமுக கவுன்சிலர் வெளியேறிய பின்பு திமுக கவுன்சிலர்கள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“