தயாரிப்பாளர் அசோக்குமாரை தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பைனான்சியர் அன்புச்செழியனின் முன் ஜாமின் மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது உறவினர் அசோக்குமார் இணை தயாரிப்பாளராக இருந்தார்.
இந்நிலையில், கடந்த மாதம் (நவம்பர்) 21ம் தேதி அசோக் குமார் தன் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் தான் காரணம் எனக் கூறி, நடிகர் சசிகுமார் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், "தாரை தப்பட்டை" படத்திற்கு வாங்கிய கடனை வட்டி, வட்டிக்கு வட்டியுடன் செலுத்தாவிட்டால், கொடி வீரன் படத்தைவெளியிட விடாமல் தடுத்து விடுவதாக அன்புச் செழியன் மிரட்டியதாக கூறியுள்ளார்.
இந்த புகாரின் அடிப்படையில் அன்புச்செழியன் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வளசரவாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் கந்துவட்டி கொட்டு மிரட்டியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு மாற்றியமைக்கபட்டது.
இந்த வழக்கில் அன்புச்செழியன் முன் ஜாமீன் கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்தார். மனு விசாரணைக்கு வந்தபோது மனுவை திரும்ப பெறுவதாக அவரின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அன்புச் செழியன் சார்பில் நேற்று மீண்டும் முன் ஜாமின் கோரி புதிதாக மனுத்தாக்கல் செய்யபட்டுள்ளது. அந்த மனுவில், தனக்கும், அசோக்குமாருக்கும் இடையில் எந்தவித பரிவர்த்தனையும் கிடையாது எனவும், சசிகுமாருடன் மட்டுமே பரிவர்த்தனைகள் இருந்ததாகவும் தன்னிடம் வாங்கிய பணத்தை கொடிவீரன் திரைப்படம் வெளியிடுவதற்கு முன்பாக அளித்துவிடுவதாக சசிக்குமார் தெரிவித்திருந்தார். மேலும் அதன்படி சசிக்குமார் தொகையை அளிக்கவில்லை.
கடன் தொகைக்கும் அசோக்குமார்க்கும் எந்த தொடர்பும் இல்லை. அவர் கடன் தொகைக்கு பதில் அளிக்க கூடிய நபரும் அசோக்குமார் இல்லை. தற்கொலை செய்து கொண்ட அசோக் குமார் போதை மருந்து பழக்கத்திற்கு உள்ளனவர். அதிக அளவில் மது பழக்கமும் அவரிடம் இருந்தது இதற்காக அசோக் குமார் சிகிச்சை எடுத்துவந்தார். அசோக்குமார்க்கு பல்வேறு நோய்கள் இருந்து வந்தன. இதற்காக அவர் அதிக அளவிலான மருந்துகளை எடுத்து வந்தார். இந்த பிரச்சனை ஊடகங்களின் மூலமாக பெரிது படுத்தி வங்கிய கடன் தொகையை திரும்ப அளிக்காமல் தற்காத்துக் கொள்ளவே இந்த புகாரை சசிக்குமார் அளித்துள்ளார். தற்கொலைக்கு தூண்டியதாக பதிவு செய்யபட்ட பிரிவுகளை தவிர இதுவரை எங்களுக்கு தெரிந்தவரை புகாரின் படி வேறு எந்த பிரிவுகளையும் சேர்க்கவில்லை.
வழக்கு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கிறேன். எந்த வகையிலும் விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்த மாட்டேன் எனவே இந்த வழக்கில் எனக்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியுள்ளார்.
இந்த மனு இன்று உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆதிநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த வழக்கில் மாநில குற்றவியல் தலைமை வழக்கறிஞர் ஆஜராக வேண்டியுள்தால் விசாரணை தள்ளிவைக்க வேண்டும் என கோரினார். இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைத்தார்