பால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் மனு

பால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

By: October 25, 2017, 2:15:54 PM

பால் நிறுவனங்கள் பற்றி பேச விதித்த தடையை நீக்க வேண்டும் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும், பால் மாதிரிகளை தனியார் பால் நிறுவனங்களே எடுக்க வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தனியார் பால் நிறுவனங்கள் விற்பனை செய்யும் பாலில் கலப்படம் உள்ளதாகவும், தரம்குறைந்ததாக உள்ளதாகவும், இதை குடிக்கும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதுடன், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் வரும் என்றும் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியிருந்தார்.

அமைச்சர் ஆதாரம் இல்லாமல் குற்றஞ்சாட்டுகிறார். இதனால், எங்கள் நிறுவனங்கள் பாதிக்கபட்டுள்ளது. எனவே எங்களின் நிறுவனங்களுக்கு எதிராக பேச அமைச்சர் ராஜேந்திரபாலாஜிக்கு தடைவிதிக்க வேண்டும். எங்கள் நிறுவனத்துக்கு தலா 1 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என ஹட்சன் அக்ரோ, டோட்லா, விஜய் டைரீஸ் ஆகிய மூன்று தனியார் பால் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன.

இந்த வழக்கு விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், ’ஆதாரம் இல்லாமல் தனியார் நிறுவன பாலில் கலப்படம் இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேச கூடாது’ என தடை விதித்தார். மேலும் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே, அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அது தொடர்பான அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தனி நீதிபதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து அமைச்சர் ராஜந்திர பாலாஜி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அதில் மூன்று மாதத்திற்கு ஒரு முறை பால் மாதிரியை சம்பந்தப்பட்ட நிறுவனமே, அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தால் உண்மை வெளி வராது என மனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ஏற்கனவே காசியாபாத்தில் உள்ள மத்திய அரசின் ஆய்வு நிறுவனத்தின் அறிக்கையை புறக்கணித்து விட்டு தனி நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். பால் மாதிரிகளை 3 மாதத்துக்கு ஒரு முறை பால் நிறுவனங்கள் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

அதேபோல இந்த விவகாரத்தில், என்னை மிரட்ட வேண்டும் என்ற நோக்கில் மனுதாரர்கள் இந்த வழக்கை தொடர்ந்துள்ளனர். சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சர் என்ற முறையில் தனக்கு வந்த புகார்களின் அடிப்படையில் தான் கருத்து தெரிவித்தேன். உச்சநீதிமன்றமே பால் கலப்படம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது. எனவே அமைச்சர் என்ற முறையில் பொதுமக்களை பாதுகாக்க தனது கருத்துகளை கூறினேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த விவகாரத்தில் எந்த தனியார் பால் நிறுவனங்களின் பெயரை குறிப்பிட்டு தான் கருத்து சொல்லவில்லை. பொத்தாம்பொதுவாக தான் கருத்தை தெரிவித்தேன் என கூறுள்ளார். எனவே தற்போது உயர்நீதிமன்றம் பால் நிறுவனங்கள் குறித்து தான் பேசக்கூடாது என பிறப்பித்த உத்தரவானது. ஒரு குடிமகன் என்ற நிலையிலும் அமைச்சர் என்ற முறையிலும் தனது பேச்சுரிமையை பாதிக்கிறது என கூறியுள்ளார். எனவே இந்த தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.

இந்த மேல்முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:The ban imposed to talk about dairy companies should be removed minister rajendra balaji

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X