மாவட்டவாரியாக கட்சியினருடன் ஆலோசனை நடக்கும் போது புகார்களை தெரிவிக்க புகார் பெட்டி வைக்கப்படும். தொண்டர்கள் தங்கள் கருத்துக்களை அதில் எழுதிப் போடலாம் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் அடிக்கடி நேரில் வந்து கழக நிர்வாகிகளையும், தோழர்களையும் சந்திக்கக்கூடிய அரிய வாய்ப்பை உங்களில் ஒருவனான நான், கழகத்தின் செயல்தலைவர் என்ற முறையில் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருந்தாலும், இந்தமுறை கழகத்தின் தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் உங்களை அழைத்து உரையாடவும், அதன்வழியே கழகத்தை மென்மேலும் வலிமைப்படுத்திக் கூர்மைப்படுத்தும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்.
வருகின்ற பிப்ரவரி 1 ஆம் தேதி இந்தக் களஆய்வு தொடங்குகிறது. மாவட்டவாரியாக ஒவ்வொரு நாளும் நடைபெறவுள்ள கள ஆய்வில், கழகத்தின் ஆணிவேருக்கு முறையாக நீர்பாய்ச்சி, உரமூட்டவதற்கான ஆலோசனைகளைப் பெறுவதற்குத் தயாராக இருக்கிறேன்.
தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அட்டவணையின் அடிப்படையில், ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்த ஊராட்சிச் செயலாளர்கள், பேரூர்க் கழகச் செயலாளர்கள், வட்டக்கழகச் செயலாளர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள கழக துணை அமைப்புகளுடைய அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் என்ற வரிசையில் சந்திப்பு நடைபெற்ற பிறகு, ஒன்றிய – நகர - பகுதி கழக செயலாளர்கள், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கழக செயலாளர் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகளுடனான சந்திப்பும் கலந்துரையாடலும் நடைபெறவிருக்கிறது.
கழகத்தின் நலன் பெருக்கும் இந்தக் களஆய்வின் போது, நீங்கள் பொறுப்பு வகிக்கும் பகுதியில், அதிலும் உங்கள் மாவட்டத்தில் உள்ள கழகத்தின் நிலையைப் பற்றித் தெரிவிக்க விரும்பும் புகார்கள் / கருத்துகள் / ஆலோசனைகளை எல்லாம் சிறுகடிதமாக எழுதி, களஆய்வு நடக்கும் இடத்தில் வைக்கப்படும் பெட்டியில் போடலாம். அந்தக் கடிதங்களை ஆய்வு செய்ய, என்னுடைய நேரடிக் கட்டுப்பாட்டில் குழு அமைக்கப்படும். பொதுத்தேர்தலின்போது வாக்குப்பெட்டியில் சேரும் வாக்குகள் எப்படி தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கின்றனவோ அதுபோல, அந்தப் பெட்டியில் போடப்படும் கடிதங்களில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளின் அடிப்படையில், கழகத்தின் வளர்ச்சிக்குத் தேவையான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளையும், அவசியமாகச் செய்ய வேண்டிய அறுவை சிகிச்சை முறைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்ற உறுதியினை அளிக்கிறேன்.
எழுத்து மூலமாக மட்டுமின்றி, பேச்சு மூலமாகவும் கருத்துகளைத் தெரிவிப்பதற்கு இந்தக் களஆய்வு சந்திப்பில் வாய்ப்பளிக்கப்படும். நிறைகள் – குறைகள் - நெஞ்சில் நிறைந்திருக்கும் உணர்வுகள் இவற்றையெல்லாம் நேரடியாக எடுத்துச் சொல்வதற்கும், பல நெருப்பாறுகளை நீந்தித் தலைவர் கலைஞர் அவர்கள் பாதுகாத்து வைத்திருக்கும் எஃகுக் கோட்டையான கழகத்தை அதே வலிமையுடன், அவரது அன்பு உடன்பிறப்புகளான நாம் எல்லோரும் தொடர்ந்துப் பாதுகாத்திட வேண்டும். எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டிய கழகப் பணிகள் குறித்தும், அதற்கான செயல்திட்டங்களை உருவாக்குவதற்கும் இந்தக் களஆய்வு துணை நிற்க வேண்டும்.
பகையுணர்ச்சி களைந்து, ஆரோக்கியமான போட்டியுணர்ச்சி மிகுந்து, வாளும், கேடயமும் தாங்கும் தகுதிமிக்க படைவீரர்களாக நடைபோடுவதற்கான பார்வையையும், பலத்தையும் பெறுவதற்கான நல்வாய்ப்பாக இந்த சந்திப்பு அமையவேண்டும் என எதிர்பார்த்து, உங்கள் திருமுகம் காணக் காத்திருக்கிறேன். மக்கள் விரோத மத்திய - மாநில அரசுகளிடமிருந்து தமிழகத்தின் நலன்களைப் பாதுகாக்க வேண்டிய போராட்டக் களங்கள் நிரம்ப உள்ளன. உள்ளாட்சித் தேர்தலில் தொடங்கி நாடாளுமன்ற – சட்டமன்ற தேர்தல்கள் அடுத்தடுத்து வரிசையாக வரவிருக்கின்றன.
போராட்டக் களங்களிலும், தேர்தல் களங்களிலும் வெற்றி பெறுவதற்கான கால்கோள் நிகழ்வாக கழகத்தின் களஆய்வு அமையட்டும்.
இவ்வாறு அறிக்கையில் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.