கோவை உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக கார் ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. இதனால். சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பெரிய கடை வீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர், போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து அந்த காரை பார்வையிட்டனர். போலீசாரின் விசாரணையில் அந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிய வந்தது.
அந்த காரைத் திறந்து பார்த்தபோது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், டவல் மற்றும் போர்வை இருந்ததும், ரத்தக்கறை காரில் இருந்ததும் தெரிய வந்தது.
மேற்கொண்டு நடத்தப்பட்ட விசாரணையில் பாலமுருகனின் மனைவி தீபா என்பவர் ஆசிரியையாக பணியாற்றி வந்ததும் - கடந்த 17-ந் தேதி அவர் காணாமல் போனதும் தெரியவந்தது.
இதேபோல், பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் வெங்கடேஷ் என்பவரும் அதே நாளில் காணாமல் போனதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக இரு குடும்பத்தினரும் அளித்த புகாரின் பேரில் பெரம்பலூர் மாவட்ட போலீசார் தீபா மற்றும் வெங்கடேஷ் ஆகியோர் காணாமல் போனதாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கார் கோவையில் இருப்பது குறித்து பெரம்பலூர் வி.களத்தூர் போலிசாருக்கும் பாலமுருகனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு பெரம்பலூர் மாவட்ட போலீசார் கோவை வந்து இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். மோப்ப நாயை கொண்டும் சோதனை நடத்தப்பட்டது.
இந்நிலையில் இன்று மாலை பெரம்பலூர் போலிசார் அந்த காரை எடுத்து செல்ல முடிவெடுத்த நிலையில் காரின் சாவி இல்லாததால் புதிதாக சாவியை தயாரித்து காரை start செய்தனர். (இன்னும் எடுத்து செல்லவில்லை)
தற்போது தீபாவும், வெங்கடேஷும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் பெரம்பலூர் போலிசார் தனிப்படைகள் அமைத்து இருவரையும் தேடி வருகின்றனர்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“