போலி வாக்களர்களை நீக்காமல் ஆர்.கே.நகர் தொகுதி தேர்தல் அறிவிப்பாணை வெளியிட தடைவிதிக்க கோரிய திமுக வழக்கை தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் 45,000 போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் கடந்த 23ஆம் தேதி திமுக சார்பில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மனு அளித்தார்.
ஆர்.கே.நகர் தொகுதியில் டிசம்பர் 31ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், அதுதொடர்பாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்தாலும், கடந்த இடைத்தேர்தலின் போது இருந்த 45,000 வாக்காளர்கள் போலியாக சேர்க்கப்பட்டனர். அவர்கள் யாரும் தற்போது வரையில் நீக்கப்படவில்லை என குற்றம்சாட்டி மனுகொடுத்திருந்தார்.
மேலும் வாக்காளர்களில் இறந்தவர்கள், வேறு இடத்துக்கு மாறி சென்றவர்கள், இரட்டை பதிவு ஆகியவற்றை நீக்கும் வரை இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக எவ்வித முடிவும் தேர்தல் ஆணையம் எடுக்காததால், ஆர்.எஸ்.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த மனுவில், போலி வாக்காளர்களை நீக்கும்வரை இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிடக்கூடாது என உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் சென்னை வாக்காளர் பட்டியலில் ஏற்பட்டுள்ள குளறுபடிகள் அனைத்திற்கும் சென்னை மாநகராட்சியே காரணம் என்பதால், இந்த வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கல் உள்ளிட்ட பணிகளை செய்ய மாநகராட்சி அதிகாரிகள் அல்லாத சிறப்பு குழுவை தேர்தல் ஆணையம் நியமிக்க வேண்டுமென இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நிரஞ்சன், 'ஏற்கனவே தேர்தலை நடத்த கோரிய வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு ஆர்.கே.நகர் தேர்தலை டிசம்பர் 31க்குள் நடத்தி முடிக்கும் என நம்புவதாக தெரிவித்தது. அதன்படி தேர்தலை நடத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறினார்.
இதனையடுத்து மனுதாரர் தரப்பு மூத்த வழக்கறிஞர் பி.வில்சன், இந்த வழக்கில் ஒரு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கவில்லையெனில், தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க வாய்ப்புள்ளது. மேலும் தேர்தல் தேதி அறிவித்துவிட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என தெரிவித்தார்.
அப்போது நீதிபதி, ஏற்கனவே தேர்தல் தேதி தொடர்பான வழக்கை தலைமை நீதிபதி விசாரித்ததால், இந்த வழக்கையும் தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைத்தார். மேலும் இந்த வழக்கை திங்கள்கிழமை விசாரணைக்கு பட்டியலிடவும் பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.
மேலும் இந்த இடைப்பட்ட காலத்தில் தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்க மாட்டார்கள் என நம்புவதாக நீதிபதி ரவிச்சந்திரபாபு தெரிவித்தார்.