தமிழக முதல்வராக எடப்பாடி பழனிச்சாமி பதவி ஏற்றதும், ‘அதிமுக ஆட்சி நீண்ட நாள் நீடிக்காது’ என்ற பேச்சு பரவலாக இருந்தது. அவர் சந்திக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இறுதியானதாக இருக்கும் என்று கணித்தவர்களும் அதிகம். ஆனால் அதையெல்லாம் தவிடு பொடியாக்கி லாவகமாக பேரவை கூட்டத்தை முடித்த்விட்டார்.
மூத்த தலைவர் ஒருவர், ‘எடப்பாடியை சாதாரணமாக எடைப்போடக் கூடாது’ என்று சொன்னார். அதற்கு அவர் சொன்ன காரணங்களில் சிலவற்றை மட்டும் பார்க்கலாம்.
ஐஏஎஸ் அதிகாரி இன்னொசெண்ட் திவ்யா மலர் கொத்து கொடுக்கிறார்
தமிழகத்தில் யார் முதல்வரோ அவருடைய புகைப்படங்கள்தான் எல்லா அரசு அலுவலகங்களிலும் வைக்க வேண்டும் என்பது விதி. ஆனால் முதல்வராக அவர் பதவி ஏற்றதும் எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் அவர் படம் வைக்கப்பட வில்லை. அவரும் அதைப் பற்றி கவலைப்படவில்லை. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமே இருந்தது. பதவி ஏற்ற ஒரு மாதம் கழித்தே அவருடைய அதிகாரப்பூர்வ படம் வெளியானது. இப்போது அனைத்து அரசு அலுவலகங்களிலும் முதல்வர் எடப்பாடியின் படம் சிரித்துக் கொண்டு இருக்கிறது. பல அலுவலகங்களில் ஜெயலலிதாவின் படம் சத்தமில்லாமல் காணாமல் போய்விட்டது.
இதைப்பற்றி அதிமுகவின் எந்த அணிக்கும் கவலை இல்லை. ஓபிஎஸ் தலைமையில் ஒரு அணி இருந்தாலும், அவர்களால் எடப்பாடி அணிக்கு எந்த பிரச்னையும் இல்லை. ஓபிஎஸ் அணியினர், ‘எங்களால் இந்த ஆட்சிக்கு எந்த பாதிப்பும் வராது’ என்று சொல்லியுள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக, ஜெயிலில் இருந்து வந்த டிடிவி.தினகரன், மீண்டும் கட்சி பணியில் ஈடுபடப்போவதாக சொன்னது, எடப்பாடி அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆனால் அதனை லாவகமாக சமாளித்திருக்கிறார், எடப்பாடி பழனிச்சாமி.
சசிகலாவின் சகோதரரான திவாகரனுக்கும், டிடிவி.தினகரனுக்கும் இடையே உள்ள ஈகோவைப் பயன்படுத்தி, அவரின் ஆதரவை பெற்றுவிட்டார், முதல்வர். அவர் மூலமாக தினகரனுக்கு செக் வைத்து ஆட்சியை தக்க வைத்துள்ளார்.
இடமாற்றம் செய்யப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் முதல்வருடன்
ஆரம்பத்தில் மத்திய அரசின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைக்கவில்லை. ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து, அமைச்சர்கள் வீடுகளில் ரெய்டு என பல்வேறு இன்னல்களை சந்திக்க வேண்டியது வந்தது. மத்திய அரசில் அங்கம் வகிக்கும், தன்னுடைய சமூகத்தைச் சேர்ந்த ஆளுநர் ஒருவர் மூலம் காய் நகர்த்தி, சமரசம் செய்து கொண்டுவிட்டார். ஜனாதிபதி தேர்தலில் ஆளும் அதிமுகவின் அனைத்து ஓட்டுக்களும் பாஜக வேட்பாளருக்குப் பெற்று கொடுத்தார். அமைச்சரவையில் உள்ள சிலர் அவருக்கு நெருக்கடி கொடுக்க முயன்ற போதெல்லாம், டெல்லியைக் காட்டி அவர்களை பயமுறுத்தினார்.
கொஞ்சம் கொஞ்சமாக தன்னை ஸ்திரப்படுத்திக் கொண்டு வரும் அவர், ஜெயலலிதா பாணியில் இடமாறுதலுக்கு ஆளான ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், முதல்வர் எடப்பாடியை சந்தித்து மலர் கொத்து கொடுத்து வாழ்த்து பெற்றனர். இதெல்லாம் சாதாரண நிகழ்வுகளாக தெரியும். கூர்ந்து பார்த்தால் மட்டுமே இதன் அர்த்தம் புரியும்.
இந்நிலையில் தமிழகத்தின் பிரதான சமூகத்தை சேர்ந்தவர்கள், அமைச்சரவையில் இடம் பெறவில்லை. சுதந்திரத்துக்கு பின்னர் அந்த சமூகம் இதுவரை அமைச்சரவையில் நீடித்துள்ளது. அந்த சமூகத்துக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க எடப்பாடி பழனிச்சாமி விரும்புகிறார். ஆனால், மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சிலர் தங்களுக்குப் பதவி வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிறார்கள். அதனால் அமைச்சரவையில் மாற்றம் செய்யாமல் பேரவை கூட்டத்தை முடித்துவிட்டார்.
இப்போது அமைச்சரவையில் சிலரை மாற்ற வேண்டிய நிர்பந்தம் அவருக்கு ஏற்பட்டுள்ளது. பேரவையில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. அதோடு அதிகாரி ஒருவருக்கு இடமாறுதலுக்காக பணம் வாங்கியதாக புகாரும் சுழன்றடித்துக் கொண்டு இருக்கிறது. அதேபோல சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மீது தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணமுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அவர் வீட்டில் இருந்து பணம் சென்றதாக தகவல் வந்ததையடுத்து, ஐடி ரெய்டு நடந்து. ஐடி அதிகாரிகளிடம் அவரும் சக அமைச்சர்களும் போட்ட சண்டை, வீட்டில் கைப்பற்றப்பட்ட டாக்குமெண்டுக்கள், குட்கா விவகாரம், குடும்ப உறுப்பினர்கள் பெயரில் உள்ள குவாரி முறைகேடு தொடர்பாக ஐடி விசாரணை என புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே அவரை கண்டிப்பாக அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டு என்று மத்தியில் ஆளும் கட்சியில் இருந்து தொடர்ந்து அழுத்தம் வந்து கொண்டு இருக்கிறதாம். பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, பாலில் கலப்படம் இருப்பதாக சொல்லி சர்சையில் சிக்கினார். லோக்கல் பால் தயாரிப்பாளர்களை சமாளிக்க ரிலைன்ஸ் போன்ற பால் உற்பத்தியாளர்கள் மீது ஆதாரம் இருப்பதாக சொன்னார். மத்திய அரசோடு நெருக்கமாக இருக்கும் அந்த நிறுவனங்கள், அவருக்கு டெல்லி மூலமாக நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது.
மத்திய அரசு தரப்பில் விஜயபாஸ்கரை நீக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிகிறது. மற்ற இருவரில் ஒருவரை முதல்வர் மாற்றும் முடிவை எடுப்பார் என தெரிகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வரும் என்கிறார்கள். புதிய அமைச்சர்களாக யார் யார் வருவார்கள் என்ற விபரங்கள் இதுவரை கசியவில்லை.