அ.தி.மு.க.வின் வங்கி கணக்கு வழக்குகளையும், ஆவணங்களையும் நவம்பர் 10 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் 12 ஆம் தேதி சென்னை வானகரத்தில் அ.தி.மு.க (அம்மா, புரட்சி தலைவி அம்மா ) அணிகள் சார்பில் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் அ.தி.மு.க.வின் தற்காலிக பொதுச்செயலாளர் சசிகலா மற்றும் துணை பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனை கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் பொதுச்செயலாளர் பதவி என்பதே கிடையாது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மேலும் பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவு என்பது ஒரு சாரர் எடுத்த முடிவாகும் எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மேலும் தேர்தல் ஆணையத்தில் கட்சி சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால்,
கட்சியின் மூன்று வங்கி கணக்குகளை கையாளவும் தடை விதிக்க வேண்டும் எனவும்,
கட்சியின் ஆவணங்களை கையாள தடை விதிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர்.
இந்த வழக்கு நீதிபதி கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கட்சியின் கணக்கு வழக்குகளையும், கட்சியின் ஆவணங்களையும் நவம்பர் 10ம் தேதிக்குள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கட்சியின் தலைமை கழக மேலாளர் மாலிங்கத்துக்கு உத்தரவிட்டார்.
மேலும் பொதுக்குழு தொடர்பாக வரும் 29ம் தேதி ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ், திண்டுக்கல் சீனிவாசன், உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதி வழக்கை ஒத்திவைத்தார்.