பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் சம்பிரதாயப்படி, சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் நாளை இரவு 8 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி வரை ஒருநாள் முழுவதும் பூட்டப்படும் என
உயர்நீதிமன்ற நிர்வாக பதிவாளர் தேவநாதன் அறிவித்துள்ளார்.
அப்போது வழக்கறிஞர்கள், பொதுமக்கள் உட்பட யாரும் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி இல்லை.
சென்னை உயர் நீதிமன்றம் 150 ஆண்டு பாரம்பரியம் மிக்கது. தினமும் ஏராளமான வழக்கறிஞர்கள், பொதுமக்கள் வந்து செல்லும் இந்த வளாகம், சென்னையின் பரபரப்பான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உயர் நீதிமன்ற வளாகத்தின் கதவுகள் அனைத்தும் ஆண்டுக்கொரு முறை ஒரு முழுவதுமாக அடைக்கப்படுவது வழக்கம்.
ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து சென்றாலும், உயர் நீதிமன்றம் என்பது பொதுமக்களுக்கான பொது இடம் அல்ல. அரசு சொத்து என்பதை நினைவூட்டி, உறுதிசெய்யும் விதமாக ஆண்டுக்கு ஒருநாள் கதவுகள் அனைத்தும் மூடப்படுகிறது.
பல ஆண்டுகளாக பின்பற்றப்படும் இந்த சம்பிரதாயம் இந்த ஆண்டில் நாளை கடைபிடிக்கப் படுகிறது. இதன்படி, சனிக்கிழமை இரவு 8 மணிக்கு உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படும்.
பொதுவாக சனி, ஞாயிறு விடுமுறை நாட்களில் உயர் நீதிமன்றம் இயங்காது என்றாலும், வழக்கறிஞர்கள் பல்வேறு அலுவல் நிமித்தமாகவும், பொது மக்கள் வழக்கறிஞர்களைச் சந்திக்கவும் வந்து செல்வது வழக்கம்.
ஆனால் நாளை மறு நாள் மட்டும் வழக்கறிஞர்களோ, பொதுமக்களோ யாரும் உயர் நீதிமன்றத்துக்குள் செல்ல அனுமதி கிடையாது என பதிவுத்துறை அறிவித்துள்ளது.