Chennai Weather Report | Tamilnadu Weather | தமிழ்நாட்டில் அதிகப்பட்சமாக வெயிலின் தாக்கம் இருந்துவருகிறது. இந்த நிலையில், 9 இடங்களில் 40 டிகிரி பாரன்ஹீட் லெயில பதிவாகி உள்ளது. மக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இதற்கிடையில் அடுத்த இரு தினங்கள் வட தமிழக மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு, திருப்பத்தூர், சேலம், கரூர் பரமத்தி, தருமபுரி, திருத்தணி, வேலூர், திருச்சி மற்றும் நாமக்கல் ஆகிய 9 இடங்களில் 40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக வெப்பநிலை பதிவாகி உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், “குமரிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.28) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது” எனக் கூறப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு
இதற்கிடையில், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை மே2ஆம் தேதி பெய்யக் கூடும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் முன்னறிவித்துள்ளது.
அதேபோல், தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை மே3ஆம் தேதி பெய்யக் கூடும்.
சென்னை வானிலை நிலவரம்
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் காணப்படும்.
இந்தத் தகவல்கள் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளன.