அரசியல் சாசன பதவியில் இருக்கும் ஆளுநர் தொடர்ந்து வரம்பு மீறிக்கொண்டிருக்கிறார். ஆளுநரின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு முடிவு கட்டும் நேரம் நெருங்கி விட்டது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தரக்கோரி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இருந்தோம். அவர் உடனே ஒப்புதல் அளித்ததால் கண்டனப் போராட்டமாக நடத்தினோம்.
திராவிட மாடல் என்பது செத்துப்போன வெற்றுக் கோஷம் என்று பா.ஜ.க. தலைவராகவே மாறி உளறியிருக்கிறார். இவர் என்ன அரசியல் தலைவரா? இவருக்கு என்ன தகுதி இருக்கிறது?” எனக் கேட்டுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட்
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர், ஆளுனர் ஆர்.என். ரவி பதவி விலக வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இது குறித்து முத்தரசன், “திராவிட மாடல் என்பது காலாவதியான கொள்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சி என ஆளுனர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.
இதன் மூலம் ஆளுனர் ரவி தன்னை பாஜக-ஆர்.எஸ்.எஸ்.காரர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது என்று தமிழ்நாடு அரசு மீது களங்கம் கற்பிக்கும் வகையில் தொடர்ந்து ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்குவதற்கு முனைந்துள்ளார்.
இந்தப் பேட்டியை அவர் அளித்ததன் மூலம் அரசியலமைப்பை அவர் மீறிவிட்டார். அவர் பதவி விலக வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“