கன்னியாகுமரி மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற இளைஞரை, போலீஸ் ஒருவர் தன் லட்டியால் அவரது மண்டையை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அச்சம்பவத்தின் சிசிடிவி வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Advertisment
இதுகுறித்து பாலிமர் செய்தி தொலைக்காட்சியில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக காவல் துறை உயரதிகாரிகள் கெடுபிடியுடன் இருப்பதால், தினமும் வாகன சோதனை நடைபெறுகிறது. இந்நிலையில், திருவட்டார் அருகே கல்லுப்பாலம் பகுதியில், திருவட்டார் காவல் நிலைய உதவி ஆய்வாளர் தேவராஜ் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, செருகோல் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவர் தன் நண்பருடன் இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றார். அங்கு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கண்ட ராஜேஷ், வாகனத்தை நிறுத்தாமல் சென்றார். இதனால், ஆத்திரமடைந்த உதவி ஆய்வாளர் தேவராஜ், தன் லட்டியால் ராஜேஷின் தலையில் ஓங்கி அடிக்கிறார். இதனால், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.
இதை சற்றும் எதிர்பாராத பொதுமக்கள் காவலர்களிடம் கேட்டப்பொழுது பொதுமக்களை தரைகுறைவாக பேசியும் பொதுமக்களை தாக்கவும் முற்பட்டனர். இதையடுத்து, பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் சேர்ந்து தாக்குதலுக்கு உள்ளான ராஜேஷை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில மாதங்களாக இதேபோல் இருசக்கர வாகன தணிக்கையின் பெயரில் பொதுமக்களை தாக்கப்படுவது தொடர்கதையாக உள்ளது என வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உடனே தலையிட்டு சம்பந்தபட்ட காவல் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.