Professor Nirmala Devi | அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி மாணவிகளை தவறான முறையில் வழிநடத்த முயன்ற வழக்கில் 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.
நிர்மலாதேவியின் வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் பெரும் புள்ளிகள் பலருக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் உலா வர தொடங்கின.
இதைத் தொடர்ந்து சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில் நீண்ட காலமாக நிர்மலா தேவிக்கு ஜாமின் வழங்கப்படவில்லை.
இந்த நிலையில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பின்பு, நீண்ட நாள்கள் கழித்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது. அப்போது இது தொடர்பாக எந்த பேட்டியும் வழங்கக் கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஏப்.18,2024) விசாரணைக்கு வந்தது. அப்போது, “பாதிக்கப்பட்ட மாணவிகளின் புகாரை 6 ஆண்டுகள் கடந்தும் விசாகா குழுவுக்கு அனுப்பாதது ஏன்? என நீதிபதிகள் கேள்வியெழுப்பினார்கள்.
மேலும், ஜூன் 7ம் தேதிக்குள் விளக்கமளிக்க அருப்புக்கோட்டை கல்லூரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னதாக இந்த வழக்கில், பேராசிரியை நிர்மலாதேவிக்கு எதிரான வழக்கை, பெண் டி.ஐ.ஜி. தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் இவ்வாறு கேள்வியெழுப்பி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“