சென்னை ஐகோர்ட் மதுரைக் கிளையில் பாபநாசம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், “ஸ்ரீ நெடுகண்ட விநாயகர் கோவில், உச்சினி மாகாளி கோவில், வேலுகந்த அம்மன் கோவில், சங்கிலி பூதத்தார் கோவில் ஆகியவற்றின் நிர்வாக அறங்காவலர்களும், திருப்பணி குழுவினரும் கோவில் பணத்தில் முறைகேடுகள் செய்துள்ளனர்.
அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த மனுவை நீதிபதி புகழேந்தி விசாரித்தார். அப்போது இந்து அறநிலையத்துறை சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், “அன்று நிர்வாக குழுவில் இருந்தவர்கள் தற்போது பதவியில் இல்லை. அவர்களிடம் இது தொடர்பாக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டிருந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சில உத்தரவுகளை பிறப்பித்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக தணிக்கை அதிகாரி 2008ல் ஆய்வு செய்துள்ளார். அப்போது ரூ.13 லட்சத்து 43 ஆயிரத்து 576 மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் அறங்காவலர்கள் பதிவேடுகளை முறையாக பராமரிக்கவில்லை எனப் பதில் அளித்துள்ளார். ஆனால் இதனடிப்படையில் அறநிலையத் துறை அதிகாரிகள் எந்த நடடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக அவர்கள் தப்பிக்க உதவி செய்துள்ளனர்.
ஆகவே இந்த வழக்கில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? கோவில் பாதுகாப்பு தொடர்பான 75 உத்தரவுகளில் எத்தனை அமல்படுத்தப்பட்டுள்ளன? என கேள்விகளை எழுப்பினார்.
தொடர்ந்து இது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என இந்து அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை மற்றொரு தேதிக்கு ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“