scorecardresearch

கொள்ளிடத்தில் மணல் குவாரிகள் செயல்படவில்லை: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவு

கொள்ளிடம் ஆற்றில் எந்த மணல் குவாரியும் அமைக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவித்த பதிலை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

The court directed to file an affidavit stating that the sand quarries are not functioning in the Kollidam river

தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஜீவகுமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் “தஞ்சாவூர் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் அமைந்துள்ள கல்லணை 2000 ஆண்டுகளுக்கு முன்பு கரிகாலச் சோழனால் கட்டப்பட்டது.

பல நூறு ஆண்டுகளாக பராமரிக்கப்பட்டு தற்போது வரை அனைவரும் வியந்து பார்க்கக்கூடிய அணையாக கல்லணை உள்ளது. கல்லணை அருகே 25 இடங்களில் மணல் குவாரி அமைப்பதற்கான தமிழ்நாடு அரசு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறது.

இதனால் மிகவும் பழமையான கல்லணை பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. மேலும் டெல்டா பகுதியில் உள்ள விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். ஏற்கெனவே கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி கொடுத்ததால் தான் கல்லணை பாலம் சேதமடைந்தது.

கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. எனவே, தஞ்சாவூர் கொள்ளிடம் பகுதியில் 25 இடங்களில் மணல் குவாரி அமைப்பதற்கான நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்கவும், பாரம்பரியமான கல்லணை அணையைக் காப்பாற்ற கொள்ளிடம் பகுதியில் மணல் குவாரிக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட வேண்டும் ” எனக் கூறியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி விக்டோரியா கௌரி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால் பாரம்பரியமான கல்லணை சேதம் அடைய வாய்ப்பு உள்ளது என கவலை தெரிவித்தனர்.

அரசு தரப்பில், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி எதுவும் அமைக்கப்படவில்லை. கொள்ளிடம் ஆற்றினைச் சுத்தம் செய்து 25 இடங்களில் குடிநீர் எடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கூறப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், கொள்ளிடம் ஆற்றில் எந்த மணல் குவாரியும் அமைக்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவித்த பதிலை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் முதல் வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

செய்தியாளர் க.சண்முகவடிவேல்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: The court directed to file an affidavit stating that the sand quarries are not functioning in the kollidam river