முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா டிசம்பர் 5, 2016இல் மறைந்த பிறகு, அதிமுக கட்சியில் பல்வேறு பிளவுகள் ஏற்பட்டன. ஜெயலலிதாவின் கோடநாடு (kodanad) பங்களாவில் கொலை- கொள்ளை சம்பவங்கள் நடந்தன.
கோடநாடு எஸ்டேட்டில் காவல் பணியில் இருந்த ஓம் பகதூர் என்ற செய்யூரிட்டி படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூர் காயங்களுடன் மீட்கப்பட்டார்.
சயானின் மனைவி, குழந்தை உயிரிழப்பு
கோடநாடு வழக்கில் சயான் என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த விவகாரத்தில், ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜின் பெயரும் அடிப்பட்டது. கனகராஜ் சேலத்தில் சாலை விபத்தில் இறந்தார்.
சயான் கேரள மாநிலம் பாலக்காட்டிற்கு மனைவி, குழந்தையுடன் செல்லும்போது கார் விபத்துக்குள்ளானது. சயான் பிழைத்துக் கொள்ள, மனைவியும், குழந்தையும் இறந்தனர்.
தூசித் தட்டிய தி.மு.க
இப்படி, கோடநாடு பங்களாவில் நடந்த கொலை, கொள்ளை சம்பவங்களைப் பற்றி விலகாத மர்மங்கள் பல இருக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்ததும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அரசு தலைமையிலான காவல்துறை கோடநாடு வழக்கை மீண்டும் தீவிரமாக விசாரித்து வருகிறது.
முன்னதாக இது தொடர்பாக தொடர்பாக சட்டசபையில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கோடநாடு வழக்கு விசாரணையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதிமுக எதிர்ப்பு
முதலமைசர் மு.க. ஸ்டாலின் அறிவிப்புக்குஅ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். கோடநாடு விவகாரத்தில் அரசியல் தலையீடு இல்லை எனவும் உண்மையை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மு.க. ஸ்டாலின் கூறினார்.
இந்த நிலையில், கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு சம்பந்தமாக, கோவை பி.ஆர்.எஸ் (PRS) மைதானத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் அய்யப்பனிடம் அக்.17ஆம் தேதி விசாரணை நடைபெற்றது.
நீதிமன்றம் உத்தரவு
இதற்கிடையில் தற்போது ஆய்வகத்துக்கு முக்கியமான உத்தரவு ஒன்றை உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. அதில், 8 செல்போன்கள், 4 சிம்கார்டுகளில் பதிவான தகவல் பரிமாற்றங்களை மூடி முத்திரையிட்டு வழங்க அறிவுறுத்தியுள்ளது.
அதாவது சிபிசிஐடி போலீசார் வழக்கின் விவரங்களை கேட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் விசாரணை மேலும் சூடுபிடிக்கக் கூடும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளாக பிஜின் குட்டி, தீபு, ஜம்சீர் அலி ஆகியோரின் செல்போன் பதிவுகள் கோரப்பட்டுள்ளன.
இதனால் இந்த வழக்கு மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. கனகராஜ் விசாரணையின்போது தாம் உள்பட 6-7 டிரைவர்கள் இருந்ததாகவும், தாம் ஜெயலலிதாவின் டிரைவராக இல்லை எனவும் வாக்குமூலம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விசாரணை நிறைவு.
கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சம்பந்தமாக பி.ஆர்.எஸ் வளாகத்தில் உள்ள சிபிசிஐடி சிறப்பு அலுவலகத்தில் இன்று சிவகுமார் என்பவர் ஆஜராகினார். சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடைபெற்ற நிலையில் விசாரணை முடிந்து திரும்பினார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜ் விபத்தில் உயிரிழந்த போது அந்த விபத்து பார்த்து ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தவர் இவர் என்பதால் இன்று அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.