அதிமுக வங்கி கணக்குகள் தொடர்பாக நீதிமன்றத்தில் வங்கிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை தினகரன் தரப்பு பார்வையிட உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
அதிமுகவின் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம், அணிகள் இணைந்து பிறகு அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட 12 தீர்மானங்கள் ரத்து செய்யக்கோரியும் கட்சியில் இருந்து வி.கே.சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோர் நீக்கபட்டதை ரத்து செய்ய கோரியும், அதிமுக கட்சியின் வங்கி கணக்குகளை நிர்வகிக்க தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தேர்தல் ஆணையத்தில் கட்சி சின்னம் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால், கட்சியின் வங்கி கணக்கு, ஆவணங்களை கையாள தடை விதிக்க வேண்டும் என்றும் அதில் கோரியிருந்தனர்.
இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது கட்சியின் வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்ளையும், மனு தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று இ.பி.எஸ், ஓ.பி.எஸ், திண்டுக்கல் சீனிவாசன் வங்கிகள் ஆகியோருக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
இந்த வழக்கு இன்று மீண்டும் உயர்நீதிமன்ற நீதிபதி சி.வி.கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுக தலைமை நிலையை மேலாளர் மகாலிங்கம், வங்கி கணக்குகள் தொடர்பான விவரங்களை சீலிட்ட கவரில் தாக்கல் செய்தார். அப்போது டி டி தினகரன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிசேக் சிங்வி, மகாலிங்கம் வங்கி கணக்கை கணக்கை இதுவரை தாக்கல் செய்யவில்லை என தெரிவித்தார்.
அப்போது அதிமுக சார்பில் ஆஜாரன மூத்த வழக்கறிஞர் வைத்தியநாதன் சீலிட்ட கவரில் வங்கி கணக்குகளை தாக்கல் செய்தார்.
வக்கீல் வைத்தியநாதன் : வழக்கில் இல்லாத மகாலிங்கத்துக்கு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் தாக்கல் செய்துள்ளோம். மனுதாரர்களில் ஒருவர் சிறையில் இருக்கிறார். மற்றொரு மனுதாரர் வழக்கு விசாரணையை சந்தித்து கொண்டிருக்கிறார். அதிமுக அம்மா அணி என்றே ஒன்றே தற்போது இல்லாத போது, இந்த வழக்கு உகந்ததல்ல. அதிமுக (அம்மா) என்பது ஒரு பதிவு செய்யபடாத அமைப்பு. வழக்கு தொடர்ந்தாவர்கள் தற்போது அதிமுக கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை. எனவே இவர்களுக்கு எந்த வித கணக்குகளையும் பார்வையிட அனுமதிக்க கூடாது. தற்போதைய நிலையில் அதிமுக (அம்மா) என்றோ, அல்லது அதிமுக (புரட்சி தலைவி அம்மா) என்றோ எந்த அணியும் இல்லை. இதை தேர்தல் ஆணையமும் சமீபத்தில் உறுதி செய்துள்ளது.
வக்கீல் அபிசேக் சிங்வி : சின்னம் தொடர்பான விவகாரத்தில் மட்டுமே தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது ரகசிய விசாரணை இல்லை என்பதால், மகாலிங்கம் தாக்கல் செய்த சீலிட்ட கவரில் உள்ளவற்றை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். சசிகலா, தினகரன் அந்த ஆவணங்களை ஆராய அனுமதிக்க வேண்டும்.
வக்கீல் வைத்தியநாதன் : வழக்குக் தொடர முகாந்திரமே இல்லாபோது சீலிட்ட கவரில் உள்ள கணக்குகளை எப்படி மனுதரார்கள் பார்வையிட அனுமதிக்க முடியும். வழக்கு தொடர்ந்த இருவரும் அதிமுக வங்கி கணக்கை பார்வையிட தாங்கள் தரப்பு ஆட்சேபிக்கிறோம்.
வக்கீல் சிங்வி : சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடாதபோது, எப்படி அவ்வாறு தாக்கல் செய்யலாம். மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே விசாரணைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்போது எங்களுக்கு வழக்கு தொடர முகந்திரம் இல்லை என எவ்வாறு கூற முடியும்.
நீதிபதி : அதிமுக காட்சிக்கு பயன்படுத்தபட்டு வரும் வங்கிகள் சார்பில் தாக்கல் செய்து ஆவணங்களை மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் பார்வையிடலாம்.
சிங்வி : சீலிட்ட கவரையும் பார்வையிட அனுமதிக்க வேண்டும்.
வைத்தியநாதன் : சீலிட்ட கவரில் தாக்கல் செய்த அறிக்கை பார்வையிட அனுமதிக்க கூடாது.
நீதிபதி : உங்கள் (எடப்பாடி தரப்பு) ஆட்சேபனைகளை மனுவாக தாக்கல் செய்யுங்கள். கணக்குகளை பார்வையிடுவது தொடர்பாக சசிகலா, தினகரன் தரப்பும் மனுத்தாக்கல் செய்யுங்கள். இருதரப்பையும் கேட்டு மகாலிங்கம் தாக்கல் செய்த ஆவணங்களை பார்வையிட அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்தார்.
பின்னர் உத்தரவிட்ட நீதிபதி வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 21 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.