சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல் துறை தலைமை அலுவலகமான டிஜிபி ஆபிஸ் வாசலில் ‘குட்கா வேர்ஹவுஸ்’ என்ற பேனருடன் போராடிய சமூக ஆர்வலர் கைது செய்யப்பட்டார்.
தமிழக காவல்துறையின் தலைமை அலுவலகம், காமராஜர் சாலையில் உள்ளது. கடந்த 22ம் தேதி டிஜிபியாக டி.கே.ராஜேந்திரன் பதவி ஏற்றுக்கொண்டார். அவர் சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த போது, சட்டத்துக்குப் புறம்பாக குட்கா விற்பனைக்கு அனுமதித்ததாகவும், அதற்காக மாதா மாதம் பல லட்சம் பணம் பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது.
போலீசாருடன் வாக்குவாதம் செய்யும் செந்தில்முருகன்
சென்னையடுத்த செங்குன்றத்தில் உள்ள குட்கா அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்திய போது, கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இந்த விபரம் தெரியவந்தது. மேலும் மற்றுமொரு கமிஷனர் ஜார்ஜ்க்கும் பணம் கொடுத்ததும் தெரியவந்தது. இது குறித்து, தலைமை செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ், அப்போது டிஜிபியாக இருந்த அசோக் குமார் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் அறிக்கை கொடுத்தனர்.
ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதே நேரத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளான டி.கே.ராஜேந்திரனை டிஜிபியாக நியமித்தது, தமிழக அரசு. இதை எதிர்த்து மதுரை கிளை சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. வருமான வரித்துறை அறிக்கை கொடுத்ததை மறைத்து தற்போதைய தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மனு தாக்கல் செய்தது பெரும் சர்சையை ஏற்படுத்தியது.
அந்த பேனர்
இந்நிலையில் இன்று காலை சமூக ஆர்வலர் செந்தில் முருகன் பேனர் ஒன்றுடன் வந்தார். அதை டிஜிபி அலுவலகம் முன்பு கட்டினார். அதில், ‘குட்கா வேர் ஹவுஸ், டி.கே.ராஜேந்திரன் ஐபிஎஸ், டீலர் குட்கா புராடெக்ட்’ என்று எழுதப்பட்டு இருந்தது.
இதை கவனித்த அங்கு பாதுகாப்பில் இருந்த போலீசார் அந்த பேனரை உடனடியாக அப்புறப்படுத்தினர். சமூக ஆரவலர் செந்தில் முருகனை, மெரினா காவல் நிலையம் கொண்டு சென்றனர். அங்கு அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.