Pollachi | Lok Sabha Election | கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் வீடு வீடாக சென்று மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க வெற்றிலை பாக்குடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தமிழ்நாட்டில் வருகிற ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 100% வாக்களிப்பதின் அவசியம் குறித்து தேர்தல் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் கடந்த முறை நடந்த முடிந்த தேர்தல்களில் 50 சதவீதம் குறைவான வாக்குப்பதிவு நடந்த பகுதிகளில் வீடு வீடாகச் சென்று நடைபெற இருக்கிற மக்களவைத் தேர்தலில் அவசியம் வாக்களிக்க கோரி வெற்றிலை பாக்குடன் தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கி வாக்காளர்களை அழைத்தனர்.
பொள்ளாச்சி சார் ஆட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான கேத்தரின் சரண்யா தலைமையில் விழிப்புணர்வு வாசகங்கள் எழுதிய பதாகைகளோடு வீடு வீடாக சென்று அழைப்பிதழ் வழங்கினர்.
மேலும், தேர்தலில் வாக்களிக்க அழைத்தனர். இதற்கிடையில், தேர்தலில் வாக்களிப்பது அவசியம் குறித்து கேஸ் சிலிண்டர், பேருந்துநிலையம், ரயில் நிலையம் மற்றும் உணவு விடுதி ஆகிய பகுதிகளின் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
செய்தியாளர் பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"