/tamil-ie/media/media_files/uploads/2022/09/vaniyambadi-dmk.jpg)
திமுக தலைவருக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் ஏன் வாழ்த்து சொல்லவில்லை என்று பாஜக தலைவர்கள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், மறுப்பக்கம் திமுகவின் இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்டத் தலைவர்கள் விநாயகர் சதூர்த்தியை கோலாகலமாகக் கொண்டாடி இருக்கிறார்கள்.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திமுக நகர செயலாளரும் நகர் மன்ற உறுப்பினரும் நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான வி.எஸ். சாரதி குமார் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை இந்து முன்னணி கொடியசைத்து துவக்கி வைத்தபோது புகைப்படம் வெளியாகி திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதி அமைப்பைக் காக்கும் சனாதன வர்ணாசிரம தர்மத்தைக் எதிர்ப்பதை திராவிட முன்னேற்றக் கழகம் கொள்கையாகக் கொண்டுள்ளது. அண்மையில், ஆளுநர் ஆர்.என். ரவிவியின் சனாதனம் குறித்த பேச்சுக்கு கருத்து தெரிவித்த திமுக பொதுச் செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தமிழ்நாட்டில் வர்ணாசிரம தருமத்துக்கு சாவு மணி அடித்தாகி விட்டது. அதை எந்தக் கொம்பனாலும் உயிர்ப்பிக்க முடியாது என்று கூறினார்.
அதே போல, திமுகவின் கொள்கைத் தலைவராக புகழப்படும் பெரியார் நடத்திய விநாயகர் சிலைகள் உடைப்பு போராட்டங்கள் தமிழக வரலாற்றில் பதிவானவை.
பெரியாரின் விநாயகர் சிலைகள் உடைப்பு போராட்டம் குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன என்ற கேள்விக்கு, அப்போதைய திமுக தலைவர் அண்ணா, நாங்கள் பிள்ளையாரையும் உடைக்க மாட்டோம், பிள்ளையாருக்கு தேங்காயையும் உடைக்க மாட்டோம் என்று கூறினார்.
அந்த வழியில், திமுக தலைவர்கள் விநாயகர் சதூர்த்திகளில் பங்கேற்தில்லை என்ற எழுதப்படாத கொள்கையாக இருந்து வருகிறது. ஆனால், பல ஆண்டுகளாகவே, திமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள், மூன்றாம் கட்டத் தலைவர்கள் கோயிலுக்கு போவதும் சாமி கும்பிடுவதும், கோயில் விழாக்களில் பங்கேற்பதும் இயல்பாக நடந்து வருகிறது.
ஆனாலும், விநாயகர் சதூர்த்தி விழாக்களில் பங்கேற்பது வாழ்த்து சொல்வது என்பது திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அனுமதிப்பதில்லை. அதே நேரத்தில், திமுக தலைவர்கள் கோயில் விழாக்களில் பங்கேற்பதையும் பெரிதாக கண்டுகொள்வதும் இல்லை.
வாணியம்பாடி திமுக நகர செயலாளர் வி.எஸ். சாரதிகுமார், விநாயகர் சதூர்த்தி சிலைகள் ஊர்வலம் நிகழ்ச்சியில் இந்து முன்னணி கொடியை ஏந்தி ஊர்வலத்தை கொடியசைத்து துவக்கி வைத்துள்ளது திமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி திமுக நகர செயலாளரும் நகர் மன்ற உறுப்பினரும் நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான வி.எஸ். சாரதி குமார் விநாயகர் சதூர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை இந்து முன்னணி கொடியசைத்து துவக்கி வைத்துள்ளார். விநாயகர் சிலைகள் ஊர்வலத்தை தொடக்கி வைத்த புகைப்படத்தை வி.எஸ். சாரதி குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த கொடியில், தர்மம் காக்க அதர்மம் அகற்ற, இந்து முன்னணி என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2022/09/New-Project-2022-09-06T143808.292.jpg)
இந்த புகைப்படத்தைப் பார்த்த திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏனென்றால், வி.எஸ். சாரதி குமார் கையில் ஏந்தியிருந்த கொடி, இந்து முன்னணி அமைப்பின் கொடி அது. திமுகவுக்கும் இந்து முன்னணி அமைப்புக்கும் கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் எதிர் துருவங்கள். திமுக நகர செயலாளர் இந்து முன்னணி கொடியைப் பிடித்திருப்பதா என்று அந்த புகைப்படத்தை திமுக தலைமைக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்துள்ளனர்.
திமுக பொதுச் செயலாளரும் பொதுப்பணித்துறை அமைச்சருமான துரைமுருகன் மற்றும் துரைமுருகனின் மகனும் திமுக எம்.பி-யுமான கதிர் ஆனந்த்தின் தீவிர ஆதரவாளராக வி.எஸ். சாரதி குமார் கருதப்படுகிறார். இதனால், துரைமுருகன், கதிர் ஆனந்தின் தீவிர ஆதரவாளரான சாரதி குமார் மீது திமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பும் சலசலப்பும் திமுகவில் ஏற்பட்டுள்ளது என்று வாணியம்பாடி திமுக வட்டாரங்கள் கூறுகின்றனர்.
இந்த சர்ச்சை குறித்து வி.எஸ். சாரதி குமாரிடம் ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு , “முதலில் அது இந்து முன்னணி கொடியே இல்லை விநாயகர் சதூர்த்தி நிகழ்ச்சிக்காக ஏற்பாடு செய்த கொடி அது. இந்த விநாயகர் சதூர்த்தி ஊர்வலம் அரசியல் லாபத்துக்காக செய்கிற விஷயம் இல்லை. நான் வந்தால் அவர்களுக்கு ஒரு திருப்தி. மரியாதையாக கூப்பிட்டார்கள். சிலை புறப்படும்போது வந்து நில்லுங்கள் என்று சொன்னார்கள். ஒவ்வொரு முறையும் ஆளும் கட்சியில் இருப்பவரை அழைப்பார்கள். இந்த வருடம் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால் திமுக நகர செயலாளரான என்னை விழாக்குழு சார்பில் அழைத்தார்கள். அவ்வளவுதான். இதில் அரசியல் ஆதாயம் தேட சில முயற்சி செய்கிறார்கள். அது நடக்காது. இந்த சிறிய விஷயத்தை பொதுச் செயலாளர் அளவுக்கெல்லம் கொண்டுசெல்லத் தேவை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.