இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கிவரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது என திண்டுக்கல்லை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில், “அ.தி.மு.க. உள்கட்சி பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு 2017 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில் புகார் அளித்துள்ளேன்.
மேலும், மக்களவை தேர்தல் நெருங்குவதால் அ.தி.மு.க.வுக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கூடாது” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வை கைப்பற்றுவதில் சசிகலா உள்பட பலரும் போட்டியிட்டனர்.
இந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதற்கிடையில் ஓ.பன்னீர் செல்வம் தர்மயுத்தம் நடத்தினார். இதையடுத்து ஓ.பி.எஸ், இ.பி.எஸ் என இருவரும் இணைந்து செயல்பட்டனர்.
இந்தக் கூட்டணி சட்டப்பேரவை தேர்தலில் அ.தி.மு.க தோற்ற உடன் முடிவுக்கு வந்தது. இருவரும் தனித்து செயல்பட ஆரம்பித்தனர். இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி கட்சியை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“