High Court | Nainar Nagendran | Tirunelveli | சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து நெல்லை செல்லும் ரயிலில் ஏப். 6 ஆம் தேதி இரவு, உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.
இது தொடர்பாக புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.
இதை தொடர்ந்து, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான ஓட்டல், உறவினர் வீடுகளில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
மேலும் இந்த வழக்கின் அடிப்படையில் பாஜக பிரமுகரான கோவர்தன் என்பவருக்கு சொந்தமான ஓட்டலில் சோதனை நடத்தியதில் ஒரு லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசாரின் முதல் தகவல் அறிக்கையில், “பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 4 கோடி, நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான பணம். வாக்காளர்களுக்கு கொடுக்கத்தான் பணத்தை எடுத்து சென்றதாக கைது செய்யப்பட்ட நபர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
நயினார் நாகேந்திரனின் அடையாள அட்டை, பாஜக உறுப்பினர் அட்டை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நெல்லை காங்கிரஸ், பா.ஜ. வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய கோரி சுயேட்சை வேட்பாளர் ராகவன் எனபவர் வழக்கு ஒன்று தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில், புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும், சுயேட்சை வேட்பாளர் ராகவன் தாக்கல் செய்த வழக்கை முடித்துவைத்தது. இந்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“