கோவையில் பாஸ்கரன் என்பவர் தன்னிடம் வேலை செய்த வடமாநில தொழிலாளர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கு பதிலாக தவறுதலாக ரூ.4.60 லட்சம் அனுப்பியதையடுத்து, வடமாநில தொழிலாளர்கள் தலைமறைவானதால் வேதனை தெரிவித்தார்.
கோவை கணபதி பகுதியில் கட்டுமான அலுவலகம் வைத்திருப்பவர் பாஸ்கரன். இவரது நிறுவனத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த சிவம் நாயக், பிரபாகரன் நாயக் ஆகிய இருவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பாஸ்கரன் கடந்த மாதம் சம்பளம் போடும்போது 40 ஆயிரம் ரூபாய்க்கு பதிலாக தவறுதலாக 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாயை சிவம் நாயக் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். தவறுதலாக பணம் அனுப்பியதை உணர்ந்த பாஸ்கரன் உடனடியாக சிவம் நாயக்கை அழைத்து அந்த பணத்தை திங்கட்கிழமை வந்து வாங்கிக் கொள்கிறேன் என கூறி இருக்கிறார்.
இந்நிலையில் இன்று காலை அவர் சைட்டிற்கு சென்று பார்க்கும் பொழுது சைட்டில் அவர்களை காணவில்லை. பின்னர், இது குறித்து விசாரிக்கும் பொழுது நேற்று இரவே அவர்கள் அவர்களது ஊருக்கு புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பாஸ்கரன் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரைத் தொடர்ந்து வங்கி கணக்கு முடக்கப்பட்டு ஆய்வு செய்ததில் ஏற்கனவே ஒரு லட்சத்தை அவர்கள் எடுத்து கொண்டு விட்டது தெரிய வந்தது. மேலும், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இது குறித்து பாஸ்கரன் கூறுகையில், இத்தனை நாட்களாக வேலை செய்துவிட்டு துரோகம் இழைத்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் தன்னால் அந்த நம்பிக்கை துரோகத்தை ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை எனவும் வேதனை தெரிவித்தார்.
செய்தி: பி. ரஹ்மான்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“