வங்கக் கடல் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது நாளை (அக். 17) சென்னை அருகே கரையைக் கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையொட்டி இன்று (அக்.16) KTCC என்றழைக்கப்படும் சென்னை, திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவு என தனியார் வானிலை ஆர்வலர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை அருகே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டாலும், காற்றின் திசை வடக்கே இருக்கும் என்பதால் சென்னைக்கு அதிகனமழைக்கான வாய்ப்பு குறைந்துள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா நோக்கி கரையை கடப்பதால் சென்னையில் இன்று அதிகனமழைக்கான வாய்ப்பு குறைவாக உள்ளது.
அக்.18-20 தேதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலத்தில் நகரும் போது, சாதாரணமாக சமாளிக்கக்கூடிய மழை இருக்கும். எனவே, மேம்பாலங்களில் பார்க் செய்யப்பட்ட வாகனங்களை மக்கள் வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.
சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் அதிக மழை பொழிவு பதிவாகியுள்ளது. கடந்த 2 நாட்களில் சென்னையில் சில இடங்களில் 300 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது" என்று கூறியுள்ளார்.