/indian-express-tamil/media/media_files/PnYLsWCgdZqZH6pIHY9D.jpg)
சென்னையில் அக்.16ஆம் தேதி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தொழில்துறை மின்நுகர்வோர் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
The Federation of Industrial Electricity Consumers: மின் கட்டண உயர்வை எதிர்த்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பினர் வரும் 16ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டம் மேற்கொள்ள இருப்பதாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கோவையில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் கூறுகையில், “கடந்தாண்டு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தால் தமிழக முதலமைச்சர் கவனத்தை ஈர்க்க பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தோம்.
மின்வாரியம் அவர்களுக்கு தோன்றியது போல் மின் கட்டணத்தை உயர்த்தக்கோரி கேட்டார்கள். மின் ஆணையமும் அவர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
அப்போது தமிழக அமைச்சரிடம் முறையிட்டோம்.இப்படி மின் கட்டணத்தை உயர்த்தினால் சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறையே இருக்காது என்று கூறினோம்.
எங்களது கோரிக்கைகளை பரிசீலிப்பதாக கூறினார்கள்.சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறையை காப்பாற்ற இந்த கூட்டமைப்பை தொடங்கினோம்.
அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் வகையில் நாங்கள் செயல்படவில்லை.நிலைக்கட்டணம் என்பது எந்த வகையிலும் சரியில்லை என்று எதிர்த்து வருகிறோம்.
மேலும், பீக் ஹவர் கட்டண உயர்வையும் எதிர்க்கிறோம்.இந்த கட்டண உயர்வை உடனடியாக திரும்பப்பெறக்கோரி வலியுறுத்தி வருகிறோம்.
தொழில்துறை மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ள நிலையில் இதனை மின்சார வாரியத்தின் தலைவர் மற்றும் கூட்டமைப்பின் நிர்வாகிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. இதில் கோரிக்கைகளை வலியுறுத்தினோம்.
ஆனால் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. எங்கள் மீது எந்த அரசியல் திணிப்பும் இல்லை. முதலமைச்சர் எங்களை சந்தித்திருந்தால் இந்த பிரச்னைக்கு எப்போதோ முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கும்.
இந்தச் சூழலில், 16ஆம் தேதி சென்னையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து தொழில்துறையினர் கலந்து கொள்கிறார்கள்” என்றார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின் போது கூட்டமைப்பின் நிர்வாகிகள் சாகுல் ஹமீது, ரவீந்திரன், மணி, சவுந்திர குமார் ஆகியோர் உடனிருந்தனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.