மக்கள் அதிகாரம் அமைப்பை பற்றி மீனவ சங்க பிரதிநிதிகள் புகார் மனு கொடுக்க போலீசின் அச்சுறுத்தலே காரணம் என மக்கள் அதிகாரம் அமைப்பு விளக்கம் கொடுத்துள்ளது.
இது குறித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சி. ராஜு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
மீனவ பிரதி நிதிகள் கொடுத்த புகார் மனுவில், காவல் துறையினரால் மீனவ மக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். மீனவ மக்கள் மீது வழக்குகள் பதிவு செய்து, தேடுதல் என்ற பெயரில் நெருக்கடிகள் கொடுத்தனர். இதனால் அமைதியற்ற சூழலில் பய உணர்வுடன் வாழ்ந்து வருகிறோம்.
தற்போது அந்த 2 வழக்கறிஞர்களும் தங்களை காத்துக்கொள்வதற்காக உயர் நீதிமன்றத்தில் மீனவ அமைப்புகளே மே 22 போராட்டத்தை முன்னெடுத்து சென்றன என்றும், தங்களுக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் தவறான வாதங்களை முன்வைப்பதாக அறிகிறோம்.
‘‘தூத்துக்குடி வன்முறை சம்பவத்துக்கும் மீனவர்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது. மக்கள் அதிகாரம் அமைப்பினர்தான் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, உணர்வுகளைத் தூண்டி மே 22 போராட்டத்தில் பங்கேற்க செய்தனர்’’ என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளரிடம் மீனவர் அமைப்பு நிர்வாகிகள் 29-6-2018 அன்று மனு அளித்தனர்.
மொத்த மனுவின் சாரம் மேற்கண்ட சில வரிகள்தான்.
ஒரு சில மீனவ சங்க நிர்வாகிகளை அச்சுறுத்தி மூளைச்சலவை செய்து, இரண்டு வழக்கறிஞர்கள் மீதும், மக்கள் அதிகார அமைப்பின் மீதும் அவதூறு பிரச்சாரத்தை போலீசு கட்டவிழ்த்துவிட்டுள்ளது.
மே 22 போராட்டம் மீனவ அமைப்புகள் முன்னெடுத்தார்கள் என எந்த நீதிமன்றத்திலும் யாரும் சொல்லவில்லை. மீனவ சங்க பிரதிநிதிகள் கொடுத்த மனுவில் போலீசின் தற்போதைய அடக்குமுறையை கண்டித்து, துப்பாக்கிச்சூடு படுகொலையை கண்டித்து ஒரு வரிகூட கிடையாது. அவர்கள் சுதந்திரமாக இந்த புகாரை கொடுக்கவில்லை.
இரு வழக்கறிஞர்களும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் அல்ல. போலீசு தனது நடவடிக்கையை நியாயபடுத்த அவ்வாறு இட்டுகட்டி பரப்பி வருகிறது.
இந்நிலையில் போலீசார் சொல்வதை வேறு வழியில்லாமல் புகாராக கொடுத்த மீனவ பிரதிநிதிகளின் மனுவை அப்படியே அனைத்து பத்திரிக்கைகளும் உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு போல் வெளியிட்டுள்ளன.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் சதி வழக்கை உயிர் நீதிமன்றத்தின் கண்காணிப்பில் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரிக்கட்டும். அப்போது உண்மை வெளியே வரும்.
இவ்வாறு அறிக்கையில் சி.ராஜு தெரிவித்துள்ளார்.