2000 new Tasmac bars across Tamil Nadu: தமிழ்நாட்டில் தற்போது 4 ஆயிரத்து 829 டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்பட்டுவருகின்றன. இதில் 2 ஆயிரம் கடைகளில் பார் வசதிகள் உள்ளன.
இந்த நிலையில், 2 ஆயிரம் புதிய பார்கள் அமைக்க தி.மு.க. அரசு டெண்டர் கோரியுள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளுவர் மாவட்டங்களில் புதிய பார்கள் அமைக்க டெண்டர் விடப்படவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இந்தப் பார்கள் நவம்பர் மாதமே செயல்படும் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகி உள்ளது. அதாவது அக்டோபர் மாதம் டெண்டர் கோரப்பட்டுள்ள நிலையில் நவம்பர் மாதம் பார்கள் செயல்பட உள்ளன.
அதுவும் தீபாவளி விற்பனையை கருத்தில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்றும் இதனால் அரசுக்கு வருவாய் பெருகும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் பார் வசதி இல்லாததால் மதுப்பிரியர்கள் சாலை ஓரங்களில் மது குடிக்கும் நிலை உள்ளது. இதனால பார்கள் வசதி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், தமிழக வீட்டுவசதித்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, “டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்க வருபவர்களை தடுத்து நிறுத்தும் விற்பனையாளர்களுக்கு பரிசு வழங்கப்படும்” என அறிவித்தார்.
இது குறித்து அவர் பேசுகையில், “வழக்கமாக இல்லாமல் டாஸ்மாக் கடைகளுக்கு புதிதாக மதுவாங்கும் எண்ணத்துடன் இளைஞர்கள், சிறுவர்கள் கடைகளுக்கு வந்தால் அவர்களை தடுத்து நிறுத்த வேண்டும்.
மேலும் அவர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி மதுவாங்குவதை தடுக்க வேண்டும். அவ்வாறு தடுக்கும் விற்பனையாளருக்கு பரிசுகள் வழங்கப்படும்” என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“