தமிழக மின்விலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்சார அமைச்சராக இருந்தவர் செந்தில் பாலாஜி. இவர் கடந்த அதிமுக ஆட்சியின்போதும் அமைச்சராக இருந்தார்.
அக்காலக்கட்டத்தில் வேலை வாய்ப்பு வழங்க பணம் பெற்றதாக அப்போதைய எதிர்க்கட்சியான திமுகவால் குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தற்போதைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புகார் அளித்தார். மேலும் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இந்த வழக்கில் பல ஆண்டுகள் கழித்து செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நெஞ்சுவலி காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் வகித்த அமைச்சர் பொறுப்புகள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமிக்கு கூடுதலாக வழங்கப்பட்டது. செந்தில் பாலாஜி பொறுப்புகள் இல்லாத அமைச்சராக தொடர்வார் என திமுக அரசு கூறியது.
இதற்கு அப்போதே ஆளுனர் ஆர்.என். ரவி ஆட்சேபம் தெரிவித்தார். தீவிரமான குற்றச்சாட்டில் உள்ள செந்தில் பாலாஜி அமைச்சரவை பொறுப்பில் தொடர தார்மீக உரிமை இல்லை என்றார்.
இந்த நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியை, அமைச்சரவை பொறுப்பில் இருந்து சஸ்பெண்ட் செய்து ஆளுனர் மாளிகை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான செய்திக் குறிப்பில், “சட்ட விரோத பணப் பரிமாற்றம் மற்றும் வேலை வாய்ப்பு மோசடியில் சிக்கிய அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“