தருமபுரி மாவட்டம், அரூர் அருகே பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து வந்த பெண்ணை, நடுவழியில் வனப்பகுதியில் இறக்கிவிட்ட அரசுப் பேருந்து நடத்துநர் மற்றும் ஓட்டுநர் இருவரையும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
தருமபுரி மாவட்டம், அரூர் அருகே நவலை கிராமத்தை சேர்ந்த பாஞ்சாலை (59) என்பவர் மாட்டிறைச்சி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் காலையில் அரூரில் இருந்து மாட்டிறைச்சி வாங்கி செல்வது வழக்கம். அதன்படி, பாஞ்சாலை செவ்வாய்க்கிழமை (20.02.2024) காலை வழக்கம் போல், அரூரில் மாட்டிறைச்சி வாங்கி சில்வர் தூக்கு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அரூர்-கிருஷ்ணகிரி செல்லும் அரசுப் பேருந்தில் சென்றுள்ளார்.
அப்போது, அந்த பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் ரகு, பேருந்தில் பாஞ்சாலை சில்வர் பாத்திரத்தில் மாட்டிறைச்சி எடுத்து சென்றதையறிந்து, பாத்திரத்தில் இருப்பது மாட்டிறைச்சி தானே என கேட்டுள்ளார். மேலும், பேருந்தில் மாட்டிறைச்சி எடுத்து வரக்கூடாது என கூறி, நடு வழியில் பேருந்தை நிறுத்தி இறக்கிவிட்டுள்ளார்.
அதற்கு பாஞ்சாலை நடத்துநரிடம் நடுவழியில் நிறுத்தாமல், பேருந்து நிறுத்தத்தில் இறக்கிவிடுமாறு வேண்டியுள்ளார். ஆனால், நடத்துநர் ரகு, பாஞ்சாலை கூறியதைப் பொருட்படுத்தாமல், மோப்பிரிப்பட்டி அருகே வனப் பகுதியில் இறக்கி விடப்பட்டார்.
பேருந்தில் இருந்து நடுவழில் அதிலும் வனப்பகுதியில் இறக்கிவிடப்பட்டதால், செய்வதறியாது தவித்த பாஞ்சாலை நடந்தே அருகில் இருந்த பேருந்து நிறுத்தத்திற்கு சென்று, வேறு பேருந்தில் ஏறி வீட்டுக்கு சென்றுள்ளார்.
வீட்டுக்குச் சென்ற பாஞ்சாலை, மாட்டிறைச்சி எடுத்து வந்ததற்காக தான் அரசுப் பேருந்தில் இருந்து பாதி வழியில் வனப் பகுதியில் இறக்கி விடப்பட்டதையும் வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு ஆதங்கப்பட்ட குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கிராமத்தினர், அந்த பேருந்து மாலையில் மீண்டும் அரூர் நோக்கி வந்த போது, பேருந்தை நிறுத்தி ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம், பாஞ்சாலையை பாதி வழியில் வனப் பகுதியில் இறக்கி விட்டது நியாயமா என்று வாக்குவாதம் செய்தனர்.
அவர்களின் கேள்விக்கு பதிலளித்த நடத்துநர், இது போல தினமும் மூன்று பேர் மாட்டிறைச்சி எடுத்து வருவார்கள். ஆனால், அவரை நடுவழியில் நான் இறக்கிவிடவில்லை, பேருந்து நிறுத்தத்தில் தான் இறக்கி விட்டேன் என தெரிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, பாஞ்சாலை தான் மாட்டிறைச்சி எடுத்து வந்ததற்காக, அரசுப் பேருந்தில் இருந்து பாதிவழியில் வனப்பகுதியில் நடத்துநர் மற்றும் ஓட்டுநரால் இறக்கிவிடப்பட்டதாகவும் அந்த பேருந்தில் பணியில் இருந்த நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தருமபுரி மண்டலத்தில் புகார் அளித்தார்.
இந்நிலையில், மாட்டிறைச்சி எடுத்து வந்த பெண் பயணியை பாதுகாப்பில்லாமல், நடு வழியில் வனப்பகுதியில் இறக்கி விட்ட அரசு பேருந்து ஓட்டுநர் சசிக்குமார் மற்றும் நடத்துனர் ரகு இருவரையும் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“