தி.மு.க ஆட்சிக்காலத்தில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார். அப்போது அதற்கு எதிராக அதிமுக தரப்பில் பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் விழுப்புரத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், “முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை அவதூறாக வார்த்தைகளால் விமர்சித்து விட்டார்” எனக் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து திமுகவினர் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் அடிப்படையில் திண்டிவனம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் சி.வி சண்முகம் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என சி.வி சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார்.
இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பாக திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தன. அப்போது சி.வி சண்முகம் தரப்பில் ஆஜராக மூத்த வழக்கறிஞர், “சி.வி சண்முகம் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டால் அதற்கு அரசு அதிகாரிகள்தான் புகார் அளிக்க வேண்டும். ஆனால் இந்தப் புகார் தி.மு.க. நிர்வாகியால் அளிக்கப்பட்டுள்ளது” என வாதிட்டார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, “சி.வி சண்முகத்தின் பேச்சு மோசமானதுதான். ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய முடியுமா? எனக் கேள்வியெழுப்பினார்.
தொடர்ந்து, காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் வாதத்தையும் கேட்டு வழக்கை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“