scorecardresearch

தீபாவளி என்றாலே அது சிவகாசி பட்டாசுச் சத்தத்தில் தான் ஆரம்பமாக வேண்டும்

மத்தாப்பூக் கம்பிகள், ஓலை வெடி, சரவெடி, சங்கு சக்கரம், பூச்சட்டி போன்ற வெடிகள் ஒன்றன் பின் ஒன்றாக சிவகாசி பட்டாசு ஆலைகளில் உருவாக்கப்பட்டன.

Diwali Crackers busting Timing announced By Tamilnadu Government
Diwali Crackers busting Timing announced By Tamilnadu Government

தீபாவளி சிவகாசி பட்டாசுகள் : தீபாவளி என்றாலே நமக்கு முதலில் ஞாபகத்திற்கு வருவது தீபாவளி பட்டாசுகள் தான். சமீப காலமாக சீனப்பட்டாசுகளின் வரத்து இந்தியாவிற்குள் அதிகரித்து வந்த காரணங்களால் சிவகாசி பட்டாசுகளின் பெருமையும் கொஞ்சம் கொஞ்சமாக மங்கத்தான் தொடங்கியிருக்கிறது. இந்தியாவில் பெருமளவில் பட்டாசுகள் உற்பத்தி செய்வது சிவகாசியில் தான்.

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் இந்த பகுதியில் பட்டாசு உற்பத்திக்கென ஆலைகள் செயல்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. சில நேரங்களில் முறையான பாதுகாப்பு இல்லாமல் வேலை செய்ய நேரிடும் காலங்களில் பட்டாசு ஆலைகளில் விபத்துகள் ஏற்படுவதும் வழக்கமான கதைகளில் ஒன்றாகிப் போனது.

ஆனால் இந்திய அளவில் சிவகாசி பட்டாசுகள் புகழ்பெற்று இருந்தது என்பதிற்கு மறுப்புகள் ஏதும் இல்லை. சிவகாசி பட்டாசு மற்றும் அதன் பின்னால் இருக்கும் வரலாறு குறித்து ஒரு பார்வை.

பட்டாசு வரலாறு

ஆரம்ப காலங்களில் இருந்தே, இந்தியாவிற்கு சிவகாசி எப்படியோ, உலகிற்கு சீனா பட்டாசு உற்பத்தியில் முன்னோடி. சீனப் பகுதிகளில் காய்ச்சப்படும் உப்பில் அதிக அளவு பொட்டாசியம் நைட்ரேட் மிகுந்திருந்தது. அந்த உப்பை சமையலுக்கு பயன்படுத்திய போது சில உப்புகள் நெருப்பில் விழுந்து வெடிக்கத் தொடங்கின. பொறிகளை எழுப்பி அடங்கிய அந்த ஒளி மிகவும் பிரகாசமாகவும், கண்ணைக் கவரும் வகையில் இருப்பதையும் கண்டறிந்தனர்.

பின்னாட்களில் அந்த உப்பினை பயன்படுத்தி பல்வேறு விதமான கண்கவர் ஒளிகளை உருவாக்கினர். அதே உப்பினை மூங்கில் குருத்துகளில் அடைத்து பட்டாசு என்ற உருவாக்கத்தினை கண்டடைந்தனர். மூங்கில் குருத்தில் வெடிப் பொருட்களை அடைத்துவைத்து வெடித்த போது மிகவும் சத்தமாக வெடித்துச் சிதறியது பட்டாசு.  சீனாவிற்கு சென்று வந்த பயணிகள் வழியாக இந்த இந்த பட்டாசு பொருட்களின் ரகசியங்கள் வெளி உலகிற்கு பரவின. இந்தியாவிலும் பரவியது.

சிவகாசி பட்டாசு

சிவகாசியில் இருந்து கொல்கத்தா மற்றும் கேரள மாநிலத்தில் இருக்கும் திருச்சூர் பகுதிகளுக்கு சென்று பட்டாசுகள் எப்படி தயாரிக்கப்படுகிறது எனபதை முறையாக கற்றுக் கொண்டு பின்னர் சிவகாசியில் பட்டாசுகள் தயாரிக்கத் தொடங்கினர்.

ஆரம்ப காலத்தில் தீப்பெட்டி தயாரிக்கும் பணிகள் தான் அங்கு மும்பரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. பின்னர் மத்தாப்பூக் கம்பிகள் அறிமுகமாயின. அதன்பின்பு தான் ஓலை வெடி, சரவெடி, சங்கு சக்கரம், பூச்சட்டி போன்ற வெடிகள் ஒன்றன் பின் ஒன்றாக சிவகாசி பட்டாசு ஆலைகளில் உருவாக்கப்பட்டன.

பட்டாசு ஆலைகள் – சிவகாசி மக்களின் வாழ்வாதாரம்

ஒருநாள் கொண்டாடத்திற்காக ஓராண்டுகள் முழுக்க உழைத்துக் கொண்டிருக்கும் இம்மக்களிற்கும், இம்மண்ணிற்கும் பின்னால் 5 லட்சம் பேரை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது இந்த தொழில்.  விருதுநகர் மாவட்டத்தில் இருக்கும் சிவகாசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் பட்டாசுத் தொழிலில் ஆரம்ப காலகட்டங்களில் பொதுமக்கள் அதிகம் பேர் ஈடுபட்டு வந்தனர்.

அப்பகுதியில் நிலவி வந்த வறட்சி, மழையின்மை ஆகியவற்றின் காரணமாக விவசாயத்திற்கு மாற்றாக மக்கள் பட்டாசு உற்பத்தி தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். அதிக அளவில் மக்கள் அந்த தொழிலில் ஈடுபட பட்டாசு ஆலைகள் அதிகமாக அங்கு உருவாகியது.

அங்கு பட்டாசு ஆலைகளில் வேலை பார்த்து வரும் மக்களுக்கென தனியாக பள்ளி கல்லூரிகளை உருவாக்கியுள்ளனர் அந்த ஆலைகளை நடத்திவரும் முதலாளிகள்.

தற்போதைய நிலை

ஒரு நாள் கொண்டாட்டமே என்றாலும், ஒரு வருடம் அதற்காக உழைத்துக் கொண்டே இருக்கும் ஓய்வறியா மனிதர்களை கொண்ட ஊர் சிவகாசி. செல்லமாக குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் இப்பகுதியின் பட்டாசுகள் தனித்துவம் மிக்கவையாக இருக்கிறது. ஆனாலும் பல்வேறு தடைகளை தாண்டி முன்னேறி வருவதற்குள் பட்டாசுகளையே வாழ்க்கையாக கொண்டிருப்பவர்களின் நிலை மோசமடைந்து வருகிறது.

சீனப்பட்டாசுகள் வரத்து, முறையான பாதுகாப்பு வசதிகள் இல்லாமையால் அடிக்கடி நடைபெறும் விபத்துகள், பட்டாசுகள் வெடிக்கத் தடை, இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு போன்ற நிபந்தனைகளால் இவர்களின் வாழ்க்கை கேள்விக் குறியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க : தமிழகத்தில் எந்தெந்த நேரங்களில் பட்டாசுகள் வெடிக்கலாம் ?

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: The history and current situations of sivakasi crackers