சரவணக்குமார்
‘அடியாத மாடு படியாது’ என்கிற சொலவடை கிராமங்களில் உண்டு. இதை அடிப்படையாக வைத்து பள்ளி மாணவர்களை பிரித்து மேய்ந்து படிக்க வைக்கும் வழக்கத்தை ஆசிரியர்கள் வைத்திருந்தார்கள். ‘பையன் படிக்கலைனா உயிரை மட்டும் வச்சிட்டு மீதி எல்லாத்தையும் எடுத்திடுங்க’ என்று பெற்றோர்கள் சொன்னதெல்லாம் பழங்கதை.
இன்றைய நிலைமை அப்படியே தலைகீழாக மாறியுள்ளது. மாணவர்களை அடிக்காமல் படிக்க வைக்க அரசே சட்டம் இயற்றியுள்ளது. அவர்களை அடிப்பது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்ட சம்பவங்களும் அரங்கேறியுள்ளன. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில சம்பவங்கள் இன்றும் நடந்த வண்ணம் உள்ளன. இது போன்று சென்னையில் புகழ்பெற்ற பள்ளி ஒன்றில் நடந்த சம்பவம் பரபரப்பை பற்ற வைத்துள்ளது.
இந்திய தொழில்நுட்ப கழகத்தின்(IIT Madras) நிர்வாகத்தில் இயங்கிவரும் பள்ளி ‘வனவாணி மெட்ரிக்குலேஷன் மேல்நிலை பள்ளி’. இங்கு படித்த பலரும் இன்றைக்கு புகழின் உச்சியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சையும் ஒருவர். இப்படி பல பெருமைகளை தன்னிடம் கொண்டுள்ள இப்பள்ளியில் விரும்பத்தகாத சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
எட்டாம் வகுப்பு படிக்கும் பதினைந்து மாணவர்கள் அன்றைய தினம் கணக்கு பாடத்தில் ஹோம் வொர்க் செய்யாமல் வந்திருக்கிறார்கள். இதற்காக அந்த ஆசிரியை கொடுத்த தண்டனை தான் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவர் ஒருவரின் பெற்றோரிடம் பேசினோம். “எல்லோருமே அவுங்களோட புள்ளைங்க நல்லா படிக்கணும்னு தான் நினைப்பாங்க. 25ம் தேதி, சில கணக்கு புரியலைன்னு சொன்னான். சரி நாளைக்கு மிஸ்கிட்டே கேட்டு போடுன்னு சொல்லி அனுப்பி வச்சேன். இவனை மாதிரி ஹோம் வொர்க் பண்ணாமல் வந்த பதினைஞ்சு மாணவர்களை, 26ம் தேதி, கொதிக்கிற வெய்யிலுனும் பார்க்காமல் ஸ்கூலுக்கு வெளியே ரோட்டில உட்கார வச்சிருக்காங்க. அதுவும் கிட்டத்தட்ட ரெண்டு மணி நேரத்துக்கு இது தொடர்ந்திருக்கு. இவுங்க பிள்ளைங்கன்னா இப்படி செய்வாங்களா?” என்று கொதித்து குமுறினார்.
மற்றொரு பெற்றோர் “ரோட்டில் உட்கார வைக்கிற அளவுக்கு அந்த பிள்ளைங்க அப்படி என்ன குத்தம் பண்ணிட்டாங்க. தப்பு பண்ணினால் கண்டிக்கட்டும், நாங்க வேண்டாம்னு சொல்லலை. அதுக்காக இப்படி செய்யிறதெல்லாம் காட்டுமிராண்டித்தனத்தின் உச்சம். அந்த பிஞ்சு மனசெல்லாம் என்ன பாடுபட்டிருக்கும். இதை நாங்க சும்மா விடப்போறதில்லை. ஐ.ஐ.டி சேர்மன்கிட்டே புகார் செய்யப்போறோம்” என்றார் கோபமாக.
இந்த புகார் குறித்து பள்ளியின் பிரின்சிபல் காவேரி பத்மநாபனிடம் பேசினோம். நாம் சொன்னதை கேட்டுக்கொண்டவர், “இல்லை சார், அப்படியெல்லாம் எதுவும் இருக்காது. ஏதாவது சும்மா சொல்லுவாங்க. இருந்தாலும் நான் விசாரிச்சிட்டு உங்களுக்கு பதில் சொல்றேன்” என்றார்.
அதன் பிறகு அவருடைய பதிலுக்காக பல முறை தொடர்புகொண்டும் நம்முடைய அழைப்பை ஏற்கவில்லை.
மாதா பிதாவிற்கு அடுத்த இடம் குருவுக்கு சொந்தமானது. இப்படி முக்கியமான இடத்தில் இருப்பவர்கள் கண்டிக்கலாமே தவிர கண்மூடித்தனமாக தண்டிப்பது தவறு என்பதே பெற்றோர்களின் கருத்து.