தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய கரூர், கோவை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த வாரம் முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தச் சோதனை 8ஆம் நாளை எட்டிய நிலையில் இன்று நிறைவுற்றது. இந்த நிலையில், கரூர் மாநகராட்சியை உள்பட்ட லாரிமேடு பகுதியில் அமைந்துள்ள வழக்கறிஞர் செங்கோட்டையன் அலுவலகத்தில் இருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 2 பெட்டிகளை வியாழக்கிழமை (ஜூன் 1) எடுத்துச் சென்றனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகிவருகின்றன. செந்தில் பாலாஜி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது.
வருமான வரித்துறை அதிகாரிகள் வந்த கார்களின் கண்ணாடி அடித்து நொறுக்கப்பட்டது. வருமான வரித்துறை அதிகாரிகளும் காயம் அடைந்தனர்.
இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 19 பேரும் கரூர் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்துவருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“