Advertisment

செங்குறுவை, கருங்குறுவை என்ற பெயர்களையெல்லாம் கேட்டதுண்டா? விதை நெல்லாகிப் போன ஜெயராமனின் பயணம்!

காக்கை சம்பா, மயில் கன்னி, கயல் கன்னி, செம்மோடன், கருமோடன் போன்ற நெற்பயிர்களும் தமிழர்கள் மண்ணில் விளைந்த மரபு நெற்பயிர்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நெல் ஜெயராமன் மரணம் , பாரம்பரிய நெற்பயிர்கள்

நெல் ஜெயராமன் மரணம்

நித்யா பாண்டியன்

Advertisment

நெல் ஜெயராமன் மரணம் : தமிழகத்தில் இயற்கை விவசாயம் என்ற வார்த்தைகளுக்கு வழி கொடுத்தவர் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார். அவரின் அடுத்த வாரிசாகவே இது நாள் வரை வாழ்ந்து வந்தார் நெல் ஜெயராமன். நெல் ஜெயராமன், இயற்கை விஞ்ஞானி கோ. நம்மாழாரின் மாணவராக பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். அந்த பயணத்தின் போது தான் மரபு நெற்பயிர்களை மீட்டெடுக்கும் களப்பணியில் ஈடுபட்டார். தமிழகத்தில் மெல்ல மெல்ல காணாமல் போன பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தவர் தான் நெல் ஜெயராமன்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி அருகில் இருக்கும் கட்டிமேடு என்ற பகுதியில் பிறந்து வளர்ந்தவர் நெல் ஜெயராமன். தன் வாழ்நாளில் 174 பாரம்பரிய நெற்பயிர்களை மீட்டிருக்கிறார். பாரம்பரிய விவசாயம் தொடர்பாக கருத்தரங்குகள் நடத்தி வந்ததோடு, வேளாண்மை படிக்கும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்து வந்தார்.

நெற்திருவிழா

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருக்கும் தணல் என்ற தன்னார்வ நிறுவனத்துடன் இணைந்து பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பாரம்பரிய நெற்ப்பயிர்களை மீட்டு, தேவைப்படும் விவசாயிகளுக்கு இலவசமாக தரும் நெற்திருவிழாவை நடத்தி வந்தார் ஜெயராமன்.

டெல்டா மாவட்டமான திருவாரூரில் அமைந்திருக்கிறது ஆதிரெங்கம் என்ற கிராமம். அந்த கிராமத்தில் தான் ஆண்டு தோறும் நெற்திருவிழா நடைபெறும். இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் வருவது வழக்கம்.

மரபு நெல் பரிமாற்றம்

பாரம்பரிய நெல்லின் உபயோகத்தையும் பயன்பாட்டையும் அதிகரிக்கும் வண்ணமாக நெற்திருவிழாவை இந்தியா முழுவதும் பிரபலப்படுத்தியவர் நெல் ஜெயராமன் தான். தமக்குத் தேவையான நெற்பயிர்களை இலவசமாக விவசாயிகள் பெற்றுக் கொண்டு இரட்டை மடங்கு நெற்பயிர்களை இலவசமாக திருப்பித் தருவதையும் வழக்கமாக கொண்டிருந்தனர்.

பாரம்பரிய நெற்பயிர்கள் மீட்பின் அவசியம்

தன் வாழ்நாளில் இதுவரை, இழப்பில் இருந்து 170ற்கும் மேற்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்திருக்கிறார். உணவுப் பயிர்களில் மரமணு மாற்றம் செய்து பல ஆண்டுகள் வரை உபயோகிக்கும் வகையில் ஆய்வுக் கூடங்களில் நெற்பயிர்கள் கண்டு பிடிக்கலாம். ஆனால் நம் மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு விளையும் ரகங்கள் ஏராளமானவை.

குறுகிய காலத்தில் சாகுபடி, மிக குறைவிலான பராமரிப்பு செலவு, குறைவான நீர் தேவைக்கு என்று அனைவரும் பாரம்பரிய நெற்பயிர்களை விட்டுவிட்டு சர்வதேச சந்தைகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நெற்பயிர்களை நம்முடைய கழனிகள் விவசாயம் செய்யத் தொடங்கினார்கள். ஆனால் யாரையும் குறை செய்ய இயலாது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தேவை, ஆறு மாதம் மற்றும் ஒரு வருடம் என்ற அளவில் சாகுபடியாகும் நெற்பயிர்கள் மூலம் விவசாயிகளுக்கு பெரிய அளவில் ஆதாயமோ, வருமானமோ கிடைப்பதில்லை என்பது உண்மை. ஆனால் இயற்கை விவசாயத்தின் தேவையும், வெளிநாட்டு விஞ்ஞானத்தால் (பூச்சிக் கொல்லிகள், செயற்கை உரங்களால் ) ஏற்படும் விளைவுகள் குறித்த விழிப்புணர்வு பல்வேறு தரப்பினருடன் சென்று சேரத் தொடங்கின. அப்படியாகவே நெற்பயிர் மீட்டெடுப்பும் இயற்கை விஞ்ஞானத்தின் கீழ் படியில் வந்து சேர்ந்தது.

பாரம்பரிய நெல் ரகங்கள்

தூயமல்லி

பூச்சி மற்றும் நோய் தாக்கத்தை எதிர்த்து வளரும் நெல் ரகம் இது. வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம் கலந்த, மிகவும் சன்னமான நெல் ரகமாக இது இருக்கிறது.

பூங்கார்

நாற்பது நாட்கள் உறக்கத்தில் இருந்து பின்பு முளைக்கும் ரகம் இந்த பூங்கார் நெல். நேரடி விதைப்பிற்கு ஏற்ற ரகம். இது தமிழகத்தின் அனைத்து மண்ணிலும் வளரும் இந்த நெல் 90 நாட்களுக்குள் அறுவடைக்கு வரும்.

ஒட்டடையான்

காவிரி டெல்டா பகுதிகளில் இருக்கும் கழிமுக மாவட்டங்களில் சாகுபடியாகும் நெற்பயிர்களில் மிக முக்கிய ஒன்றாகும். கருஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் இந்த நெல்லை 200 நாட்களில் அறுவடை செய்வார்கள் விவசாயிகள். அதிக அளவு வைக்கோல் தருவதால் கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கும் மிகவும் ஏற்ற நெல் ரகம் ஆகும்.

செங்குறுவை - கருங்குறுவை

மிகவும் குறுகிய காலத்தில் அறுவடை செய்ய வேண்டும் என்று கூறி தான் வெளிநாடுகளில் இருந்து நெற்பயிர்கள் இறக்குமதி செய்யப்பட்டன. ஆனால் தமிழகத்தின் செங்குறுவை மற்றும் கருங்குறுவை போன்ற நெற்பயிர்கள் எல்லாம் 90 நாட்களிலேயே விளையும் பயிர்கள்.  அறுபது நாளில் மகசூழுக்கு வரும் நெற்பயிர்களும் கூட நம்முடைய முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். அப்பயிர் அறுபதாம் குறுவை என்று அழைக்கப்பட்டது.

கடற்கரைப் பகுதிகளிலும் விவசாயம் பார்த்த நம் முன்னோர்கள்

பொதுவாக இன்றைய கால கட்டத்தில், கடல் நீர் புகும் இடங்களில் நெற்பயிர்கள் விவசாயம் செய்வது கிடையாது. ஆனால் முன்னாட்களில் வாடன் சம்பா, மாப்பிள்ளை சம்பா, புழுதி விரட்டி, ஒசுவக்குத்தாளை போன்ற நெற்பயிர்கள் வளர்க்கப்பட்டன.

கதம்பை நிறத்தான், ஆள்ளொட்டி மசபுழுதி, கயிலைப் பதியான், வல்லவாய் காத்தான், அமரபதியான், காக்கை சம்பா, மயில் கன்னி, கயல் கன்னி, செம்மோடன், கருமோடன் போன்ற நெற்பயிர்களும் தமிழர்கள் மண்ணில் விளைந்த மரபு நெற்பயிர்கள்.

பெற்ற விருதுகள்

ஒவ்வொரு ஊராக தேடிப் போய் அம்மண்ணின் தன்மையைப் பொறுத்து அங்கு வளர்ந்து வந்த நெற்பயிர்களை எல்லாம் சேமித்து நெல் வங்கி ஒன்றாகவே செயல்பட்டார் நெல் ஜெயராமன்.  நெல் ஜெயராமனின் சேவையைப் பாராட்டி குடியரசுத் தலைவர் விருதும், தமிழக அரசு , கோவை வேளாண் பல்கலைக்கழகம் உள்ளிட்ட உயரிய அமைப்புகள் பல விருதுகள் வழங்கியும் சிறப்பித்திருந்தனர்.

நெல் ஜெயராமன் மரணம்

இது போன்ற நெற்பயிர்களை தமிழகத்தில் மீட்டெடுத்த பெருமை நெல் ஜெயராமனையும் பல்வேறு இயற்கை விவசாயிகளையும் தான் சாரும். விதை நெல்லாக மண்ணில் விதைக்கப்பட்டார் நெல் ஜெயராமன் என்பது இயற்கை விவசாயத்திற்கும் தமிழர்களுக்கும் ஏற்பட்ட பேரிழப்பு.

மேலும் படிக்க : நெல் ஜெயராமன் காலமானார்

Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment