சென்னை அருகே உள்ள திருவள்ளூர் மாவட்டத்திற்கு பொறுப்பு நீதிபதியாக உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம். சுப்ரமணியம் உள்ளார்.
இவர், புழல் சிறையில் இன்று திடீர் சோதனை நடத்தினார். இதையடுத்து, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தினார்.
இந்தக் கூட்டத்தில், “பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் இருப்பது போன்று சிறைக் கைதிகளுக்கு தாம்பத்திய உரிமை வழங்கும் திட்டத்தை தமிழகத்திலும் செயல்படுத்துவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது.
இதுமட்டுமின்றி புழல் சிறையில் உள்ள கைதிகளுக்கும், சிறைக்கு வரும் பார்வையாளர்களுக்கும் அறை வசதி, மின் விசிறி, தரமான உணவு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
ஏற்கனவே ஆறு வயது வரையிலான குழந்தைகள் சிறையில் தாயுடன் வசிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்தக் குழந்தைகளுக்கு சத்தான உணவுகள் வழங்கவும், மழலையர் பள்ளிகளைத் தொடங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
தொடர்ந்து, நீதிமன்றம் ஜாமீன் அளித்தும் பிணைத் தொகையைச் செலுத்த முடியாத காரணத்தால் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
மேலும், சிறை வாசிகளுக்கு தேவையான மருத்துவ வசதிகளைச் செய்து தர வேண்டுமெனவும் அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“