நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் தமிழக திரையரங்குகளில் ஏற்கனவே வெளியிடப்படாத நிலையில் மல்டி பிளக்ஸ் திரையரங்கங்களிலும் இன்று (மே 7) முதல் திரையிடப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
விபுல் ஷா தயாரிப்பில் இயக்குநர் சுதிப்டோ சென் இயக்கத்தில் உருவாகி வெளியாகி உள்ள திரைப்படம் 'தி கேரளா ஸ்டோரி'. படத்தின் டீசர் வெளியானதில் இருந்து பல சர்ச்சைகள் எழுந்தன. கேரளாவைச் சேர்ந்த பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்பில் சேர்க்கப்படுவது போன்று காட்சிகள் இடம் பெற்றிருக்கும். இது உண்மை சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டதாக படக் குழு கூறியது.
இப்படத்திற்கு கேரளா, தமிழகம் உள்பட பல பகுதிகளில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. கேரள முதல்வர் பினராயி விஜயன் படத்திற்கு கண்டனம் தெரிவித்தார். நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட கட்சிகள், இஸ்லாமிய அமைப்புகள் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். தொடர்ந்து படத்தை திரையிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. சென்னை உயர் நீதிமன்றமும் இது தொடர்பான வழக்கை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து திட்டமிட்டபடி தி கேரளா ஸ்டோரி படம் நேற்று முன் தினம் வெளியானது. தமிழகத்தில் திரையரங்குகளில் படம் வெளியாகவில்லை. மல்டி பிளக்ஸ் திரையரங்கங்களில் மட்டும் வெளியானது. சென்னையில் அண்ணாநகர் வி.ஆர். மால், ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ் அவென்யூ, விருகம்பாக்கம் ஐநாக்ஸ், வேளச்சேரி பி.வி.ஆர். உள்ளிட்ட மல்டி பிளக்ஸ் திரையரங்கங்களில் வெளியானது.
இந்நிலையில் 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் மல்டி பிளக்ஸ் திரையரங்கங்களில் திரையிடப்படாது என மல்டிபிளக்ஸ் திரையரங்கங்கள் அறிவித்துள்ளன. சட்டம் ஒழுங்கு பிரச்சனை, படத்திற்கான வரவேற்பு இல்லாததால் திரையரங்கு நிர்வாகங்கள் இந்த முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“