குலசை தசரா விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குலசை தசரா விழா இன்று காலை கொடிஏற்றத்துடன் தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் மாறுவேடம் போட்டு, ஊர் ஊராக சென்று காணிக்கை பெற்று வருகிறார்கள்.

By: September 21, 2017, 1:24:28 PM

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் தசரா விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தென்மாவட்டங்களில் புகழ்பெற்ற கோவில்களில் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலும் ஒன்றாகும். இங்கு கொண்டாடப்படும் நவராத்திரி தசரா பெரும் விழா பிரசித்திபெற்றது. இதையொட்டி, நேற்று, (புதன்கிழமை) நண்பகலில் காளி பூஜை நடந்தது. தொடர்ந்து காளி பக்தர்கள் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. அம்மனுக்கு காப்புகட்டும் நிகழ்ச்சியும் நடந்தது.

இன்று காலை கொடிஏற்றம் நடந்தது. இதனை முன்னிட்டு அதிகாலை 5 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட யானையில் கொடிப்பட்டம் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. தொடர்ந்து காலை 9 மணிக்கு கோவில் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதன் பின்னர் கொடி மரத்திற்கு பல்வேறு வகையான அபிசேகங்கள், சிறப்பு பூஜைகளுடன் தசரா திருவிழா தொடங்கியது. காலை 10 மணிக்கு சிவலூர் தசரா குழுசார்பில் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதனை கோவில் செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். அதனை தொடர்ந்து விரதம் இருந்து வந்த பக்தர்கள் கோவிலுக்கு வந்து, அர்ச்சகர் கையினால் தங்களது வலது கையில் மஞ்சள் கயிற்றிலான காப்பை கட்டி கொண்டார்கள். அதன் பின்னர் அவர்கள், தங்களுக்கு பிடித்தமான வேடம் அணிந்து ஊர்ஊராக சென்று அம்மனின் பெயரில் காணிக்கை வாங்குவார்கள். 10–ம் திருநாள் அன்று தாங்கள் வாங்கிய காணிக்கையை கோவிலுக்கு கொண்டு வந்து சேர்ப்பார்கள்.

அம்மன் விதி உலா தசரா திருவிழா நாட்களில் தினமும் காலை முதல் இரவு வரை அம்மனுக்கு சிறப்பு அபிசேகங்களும், 29–ந்தேதி வரை மதியம் 12 மணிக்கு கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்படும். மாலை 4 மணி முதல் சமய சொற்பொழிவு பட்டிமன்றம், இன்னிசை நிகழ்ச்சி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. தினமும் ஒரு திருக்கோலத்தில் இரவு 9 மணிக்கு அம்மன் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்வழங்குகிறார். சூரசம்காரம் 10–ம் திருநாளான வருகிற 30–ந்தேதி (சனிக்கிழமை) நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையுடன் அன்னை முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி கடற்கரைக்கு செல்வார். அங்கு மகிசாசூரனை சம்காரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறும்.

இந்த நிகழ்ச்சியை காண அன்று காலை முதல் இரவு விடிய விடிய பல லட்சம் பக்தர்கள் கடற்கரையில் திரள்வார்கள். விடிய விடிய குலசேகரன்பட்டினத்தில் 500–க்கும் மேற்பட்ட தசரா குழுவினர்கள் ஆங்காங்கே கலை நிகழ்ச்சி நடத்துவார்கள். திரும்பும் திசைகளில் எல்லாம் வேடம் அணிந்த பக்தர்களாகவே தெரிவார்கள்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:The kulassi dasara festival started with the flag hosting

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X