அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அப்போது வேலை வாங்கித் தருவதாகக் கூறி மோசடி செய்து பணம் பெற்றதாகவும் அப்பணம் முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணைக்காக ஜூன் 13ம் தேதி காலை முதல் செந்தில் பாலாஜி வீடு மற்றும் தலைமை செயலகத்தில் அவர் இருக்கும் அறை வரை சோதனை நடைபெற்றது.
இந்நிலையில் 13ம் தேதி நள்ளிரவு அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் வங்கிக் கணக்குகளை சோதனையிட்டதில், அவரது வங்கி கணக்கில் 1 கோடியே 34 லட்சம் ரூபாயும், மனைவி மேகலா கணக்கில் 29 லட்சத்து, 55 ஆயிரம் ரூபாயும், டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இது வருமானவரிக் கணக்கில் தாக்கல் செய்யப்பட்ட விவரங்களுடன் இது கூடுதலாக இருப்பதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனர் மற்றும் ஓட்டுநர் பணிகளுக்கு உரிய தேர்வு நடைமுறைகளை பின்பற்றாமல் பெற்ற பணத்தை செந்தில் பாலாஜி சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்துள்ளார் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது என்று அதற்காக கைது செய்துள்ளாக அமலாக்கத்துறை கூறியுள்ளது.
மேலும் அரசு போக்குவரத்து கழகங்களின் முன்னாள் நிர்வாக இயக்குநனர்களுடன் சேர்த்து செந்தில் பாலஜியின் சகோதரர் ஆர்.வி. அசோக்குமார், எம்.கார்த்திகேயன் உள்ளிட்டோர் சேர்ந்து இந்த மோசடியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைக்காக பணம் கொடுத்த கே. அருள்மணி, எஸ்.தேவசகாயம், வி.கணேஷ் குமார் ஆகியோர் அளித்த புகார் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட இவ்வழக்குகளின் விசாரணை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த இந்த வழக்குகளின் தன்மையை கருத்தில் கொண்டு சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டதின் 2(1)(u), 2 (1) ( v) மற்றும் 3 ஆகிய பிரிவுகளில் அமலாகத்துறையால் 2021ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின்படி, 2022ம் ஆண்டில், வழக்கு தொடர்பான விசாரணைக்காக செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு பலமுறை சம்மன் அனுப்பியும், ஒரு முறைகூட ஆஜராகவில்லை என அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.
செந்தில் பாலாஜி மீது 2015, 2017, 2018ம் ஆண்டுகளில் சென்னை மத்திய குற்றப்பிரிவு பதிவு செய்த வழக்குகளில் உள்ள பிரிவுகள் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் அட்டவணையில் பார்ட் ஏ-ல் வருவதால், அதிகபட்சமாக அவருக்கு 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“