Madras High Court | சென்னை உயர் நீதிமன்றத்தில் கடலூர் முருகன்குடியைச் சேர்ந்த கனிமொழி மணிமாறன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், “நாடு முழுவதும் செறிவூட்டப்பட்ட அரிசியை மத்திய அரசு விநியோகம் செய்ய உள்ளது. இந்தத் திட்டம் தமிழ்நாட்டில் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ் பள்ளிக் குழந்தைகள் மற்றும் ரேஷன் கடைகளிலும் செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்கப்படுகிறது.
உடல் நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்தத் திட்டத்தை தடை செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.
மேலும், செறிவூட்டப்பட்ட அரிசி தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பினரும் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், “தலசீமியா, அமீனியா உள்ளிட்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசியை உண்ண வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் இன்று (ஏப்.26,2024) விசாரணைக்கு வந்தது.
இந்த வழக்கில் தமிழ்நாடு அரசு சார்பில் பி.எஸ் ராமன் ஆஜரானார். அப்போது, “இது தொடர்பான எச்சரிக்கை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுள்ளது.
எனவே தனியாக எச்சரிக்கை வாசகம் இடம்பெற தேவை இல்லை” என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “எவ்வித அறிவியல் பூர்வமான சோதனைகள் இன்றி இந்த அரிசி வழங்கப்படுகிறது” என்று வாதிட்டார்.
இநத வாதங்களை கேட்ட நீதிபதிகள், “திட்டம் நல்ல திட்டம் என்றாலும் அறிவியல் பூர்வமாக ஆய்வுகள் நடத்தாமல் விநியோகிக்கப்படுமா? எனக் கேள்விகள் எழுப்பினர்.
மேலும் இந்த வழக்கை ஜூன் 19ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“